தீப்பற்றி எரிந்த 13வது மாடி வீட்டிலிருந்து ஏணியுடன் இரு ஆடவர்கள் மீட்பு

தீப்பற்றி எரிந்த 13வது மாடி வீட்டிலிருந்து ஏணியுடன் இரு ஆடவர்கள் மீட்பு

2 mins read
ce19ad3d-0265-454a-b108-b19b1d890b25
-
Google News Preferred Icon

புக்கிட் பாத்தோக்கில் உள்ள ஓர் அடுக்குமாடி வீட்டில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 1) அதிகாலை நேரத்தில் தீப்பற்றியபோது, உயரமான ஏணியுடன் வீட்டில் இருந்தவர்களைக் காப்பாற்றியதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

புக்கிட் பாத்தோக் ஸ்திரீட் 21ன் கட்டடம் 210A-ல் உள்ள அந்த வீட்டில் மூண்ட தீயை அணைக்க காலை 4.30 மணியளவில் குடிமைத் தற்காப்புப் படையின் தீயணைப்பாளர்கள் விரைந்து சென்றனர்.

தீயணைப்பாளர்கள், கழிவறையில் இருந்த 60 வயது மதிக்கத்தக்க பெண்ணைக் காப்பாற்றினார்கள். இரண்டு நீர்க்குழாய்களுடன் தீயும் அணைக்கப்பட்டது.

அப்போது, 60 வயது மதிக்கத்தக்க ஓர் ஆடவரும், 30 வயது மதிக்கத்தக்க மற்றோர் ஆடவரும் சமையலறையின் சன்னலுக்கு வெளியிலுள்ள திண்டின்மீது நின்று கொண்டிருந்தனர்.

சமையலறையில் ஏகப்பட்ட பொருட்கள் குவிந்து கிடந்ததாலும், இரு ஆடவர்களும் மிகவும் களைத்துப் போயிருந்ததாலும், அவர்களைப் பாதுகாப்பாக உள்ளே இழுப்பது சிரமமாக இருந்ததாகக் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

இதனால், 60 மீட்டர் உயரமான ஏணி பயன்படுத்தப்பட்டது.

தீயணைப்பாளர்கள் வீட்டுக்குள் இருந்து இரு ஆடவர்களையும் முதலில் கயிறுகளுடன் பாதுகாப்பாகக் கட்டினார்கள். பிறகு, மேல்வீட்டிலிருந்து கயிற்றின் துணையுடன் இறங்கிவந்த மீட்பாளர்கள், இரு ஆடவர்களையும் ஏணியின் கூண்டுக்குள் பாதுகாப்பாகக் கொண்டு சென்றனர். அதன்பிறகு, கீழே கொண்டு வரப்பட்ட இரு ஆடவர்களுக்கும் முதலுதவி அளிக்கப்பட்டது.

மீட்கப்பட்ட மூவருமே தீக்காயம் பட்டிருந்ததோடு, புகையையும் சுவாசித்திருந்தனர். இதனால் மூவரும் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

தீ மூண்டதற்கான காரணம் விசாரிக்கப்படுகிறது.