அடுக்குமாடி வீட்டுக்கு வெளியே தீ மூட்ட நண்பரை ஏவிய ஆடவருக்குச் சிறை

அடுக்குமாடி வீட்டுக்கு வெளியே தீ மூட்ட நண்பரை ஏவிய ஆடவருக்குச் சிறை

2 mins read
6ebfd2c6-217b-4f00-b5ae-7400fc1f47a7
-

தனது மகனும் முன்னாள் மனைவியும் தூங்கிக்கொண்டிருந்த அடுக்குமாடி வீட்டுக்கு வெளியில் இருந்த மெத்தைக்குத் தீ வைக்க 57 வயது ஆடவர் ஒருவர் தனது நண்பரை அனுப்பினார். அந்தத் தீயினால் 10,000 வெள்ளி பெறுமானமுள்ள சேதம் ஏற்பட்டுள்ளது. ஆயினும் சம்பந்தப்பட்ட பெண்ணும் அவரது மகனும் எந்தக் காயமுமின்றித் தப்பித்தனர்.

இந்தக் குற்றச்செயலுக்காக சாஃபி ஜன்டானுக்கு ஏழு ஆண்டு மூன்று வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இவ்வாண்டு பிப்ரவரி மாதத்தின் முற்பகுதியில், சுவா சூ காங் வட்டாரத்தில் உள்ள அந்த அடுக்குமாடி வீட்டுக்கு சாஃபி சென்றபோது அதன் பூட்டு மாற்றப்பட்டிருந்ததை அறிந்தார்.

சாஃபி பலமுறை தங்களைத் தொல்லைப்படுத்தியதால் அவரது முன்னாள் மனைவியும் மகனும் இதனைச் செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. பூட்டுக் கொல்லரை அழைக்க விரும்பாத சாஃபி, நுழைவாயிலின் இரும்புக் கம்பிக்கதவை அகற்றினார். புதிய கம்பிக்கதவுக்காக அவரது மகன் 600 வெள்ளிக்கு மேல் செலவு செய்யவேண்டியிருந்தது.

பிறகு பிப்ரவரியின் பிற்பகுதிக்குள் அதே வீட்டுக்குத் திரும்பிய சாஃபி, வாசற் கதவில் சாயத்தை ஊற்றினார். அதன் பிறகு, அவர் தனது நண்பனான முகம்மது தனிஷ் அமர் சுஹார்டியை வீட்டுக்கு வெளியில் இருந்த ஒரு மெத்தைக்குத் தீ வைக்க அனுப்பினார். அதற்காக சாஃபி அவருக்கு 300 வெள்ளி தந்தார். வீட்டுக்கு வெளியே இருந்த குளிர்பதனப் பெட்டி, அலமாரி, காலணி வைப்பதற்கான அடுக்குகள் ஆகிய பொருட்களும் தீப்பற்றின. சாஃபிக்குச் சொந்தமான அந்தப் பொருட்களை அவர் எடுத்துச் செல்வதற்காக அவரது முன்னாள் மனைவியும் மகனும் அவற்றை வெளியே எடுத்து வைத்திருந்தனர்.

முன்னதாக 15,000 வெள்ளி பிணையில் வெளிவந்த சாஃபி, வரும் டிசம்பர் மாதம் 2ஆம் தேதி அரசு நீதிமன்றத்தில் சரணடைந்தபின் தனது தண்டனையை ஆற்றத் தொடங்குவார்.