நகரமன்ற நிதி விவகாரங்களிலிருந்து சில்வியா லிம், லோ தியா கியாங் விலகக் கோரி நாடாளுமன்றத்தில் தீர்மானம்

நகரமன்ற நிதி விவகாரங்களிலிருந்து சில்வியா லிம், லோ தியா கியாங் விலகக் கோரி நாடாளுமன்றத்தில் தீர்மானம்

2 mins read
319d15da-c66e-424e-ab10-c0c8e6f6ad58
-

அல்ஜுனிட்-ஹவ்காங் நகரமன்ற நிதி விவகாரங்களிலிருந்து பாட்டாளிக் கட்சியின் சில்வியா லிம், லோ தியா கியாங் ஆகியோர் விலகி இருக்க வேண்டும் என்று கோரும் தீர்மானம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமையன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் அல்ஜுனிட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களான சில்வியா லிம்மும் லோ தியா கியாங்கும் தாங்கள் நிர்வகிக்கும் தொகுதிக்கு ஒப்பந்ததார நிறுவனமாக தங்கள் ஆதரவாளர்களை நியமித்ததில் அவர்கள் இருவரும் நேர்மையற்ற முறையில் நடந்துகொண்டனர் என்று மூன்று வாரங்களுக்கு முன் தீர்ப்பளித்த நிலையில் இந்தத் தீர்மானம் தாக்கலாகி உள்ளது.

இந்தத் தீர்மானத்தைத் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் உயர்தர நேர்மையும் பொறுப்புணர்வும் கொண்டிருப்பதை நாடாளுமன்றம் வலியுறுத்த வேண்டும் என்று இந்தத் தீர்மானம் கேட்டுக்கொள்வதாக அமையும் என்று நாடாளுமன்ற அலுவலரின் மின்னஞ்சல் தெரிவிக்கிறது.

இதுகுறித்து கருத்து கேட்டபோது இது பற்றி நாடாளுமன்றத்தில் தாம் பேச உள்ளதாகக் பாட்டாளிக் கட்சியின் தலைவர் பிரித்தம் சிங் குறிப்பிட்டார்.

அக்டோபர் மாதம் 11ஆம் தேதி உயர் நீதிமன்ற நீதிபதி கண்ணன் ரமேஷ் வெளியிட்ட தீர்ப்பில் திருவாட்டி லிம்மும் திரு லோவும் பொதுமக்கள் நலனில் கடமையாற்ற வேண்டிய பொறுப்பில் இருந்து விலகிவிட்டனர் என்றும் அவர்கள் நகரமன்றத்திற்கு ஏற்பட்ட இழப்பைச் சரிசெய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இதில் அவர்கள் இருவரின் கண்காணிப்பின்கீழ் முறையற்ற வகையில் மில்லியன்கணக்கான பணம் செலவிடப்பட்டதாகக் அவர் கூறினார்.

ஏலக்குத்தகைக்கு அழைப்பு விடாமல் எஃப்எம் சொல்யூஷன்ஸ் அண்ட் சர்விசஸ், எஃப்எம் சொல்யூஷன்ஸ் அண்ட் இன்டிகிரேட்டட் சர்விசஸ் ஆகிய நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கியதால் அவர்கள் தங்கள் குடியிருப்பாளர்களின் நலன்களுக்கு மேலாக தங்கள் தனிப்பட்ட அரசியல் நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் என்று நீதிபதி கூறினார்.