புதிதாக அமையவிருக்கும் பிடாடாரி வட்டாரத்தில் மலாய்வழி கல்வி முறையைக் கொண்ட சங் நீல உத்தமா உயர்நிலைப்பள்ளி முன்பு இருந்த இடத்திற்குப் பக்கத்திலுள்ள ஒரு சாலைக்கு 'சங் நீல உத்தமா ரோடு' என்ற பெயர் சூட்டப்படும். துணைப்பிரதமர் ஹெங் சுவீ கியட் இதனை இன்று ( நவம்பர் 3ஆம் தேதி) அறிவித்தார்.
சிங்கப்பூரில் நிறுவப்பட்ட மலாய்வழி கல்வியை வழங்கிய முதல் இரண்டு உயர்நிலைப் பள்ளிகளாக சங் நீல உத்தமா உயர்நிலைப்பள்ளியும் துன் செரி லானாங் உயர்நிலைப்பள்ளியும் திகழ்ந்தன. அந்தப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களும் கற்பித்த ஆசிரியர்களும் மீண்டும் ஒன்றுகூடிய நிகழ்ச்சி ஒன்றில் திரு ஹெங் உரையாற்றினார். ஆர்ச்சர்ட் ஹோட்டலில் நடைபெற்ற அந்நிகழ்ச்சியில் சுமார் 800 பேர் கலந்துகொண்டனர்.
"சிங்கப்பூரின் மலாய் கல்வியில் சங் நீல உத்தமா உயர்நிலைப்பள்ளி முக்கிய பங்காற்றி வருவதால் மலாய் சமூகம் இந்தக் கோரிக்கையை முன்வைத்து வந்தது," என்று திரு ஹெங் கூறினார்.
பிடாடாரி வட்டாரத்தில் அமையவிருக்கும் புதிய மரபுடைமை பாதையின் ஒரு பகுதி 'சங் நீல உத்தமா பொல்வார்ட்' என்றும் அழைக்கப்படும். முன்னதாக அப்பர் அல்ஜுனிட் ரோட்டின் ஒருபகுதியாக இருந்த அது இப்போது பாதசாரிகள் மட்டுமே செல்லக்கூடியதாக இருக்கும் என்றார் திரு ஹெங்.
இந்தப் பாதை, புதிய பிடாடாரி பூங்காவைக் கடந்து போகும். பிடாடாரி வட்டாரத்தைப் பற்றிய கடந்த கால நினைவுகளைப் பற்றிய சில குறிப்புகள் இந்த இடத்தில் வைக்கப்படும்.
பிடாடாரி வட்டாரம் 2022ஆம் ஆண்டுக்குள் அமைத்து முடிக்கப்படும்.
இந்தச் சாலைக்கு சங் நீல உத்தமாவின் பெயரைச் சூட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான 82 வயது வான் ஹுசேன் ஸூஹ்ரியும் 73 வயது யாத்திமான் யூசோஃபும் குரல்கொடுத்து வந்ததை திரு ஹெங் குறிப்பிட்டார். பெயர் மாற்றத்தைக் கோரி அவர்கள் இருவரும் அரசாங்கத்திலுள்ள சிலருக்குக் கடிதம் அனுப்பியதாகவும் அவர் கூறினார்.
சங் நீல உத்தமா உயர்நிலைப்பள்ளியின் துணை முதல்வராக திரு வான் ஹுசேன் பணியாற்றினார். திரு யாத்திமான் துன் செரி லானாங் உயர்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்.
"சங் நீல உத்தமாவின் பங்களிப்புகளைக் கருத்தில் கொண்டு தேசிய வளர்ச்சி அமைச்சும் கட்டடப் பெயர்கள் கழகமும் இந்த விவகாரத்தை நன்கு ஆராய்ந்தன. இந்தப் புதிய பெயருக்கு அவர்கள் சம்மதம் தெரிவித்தது குறித்து நான் மகிழ்கிறேன்," என்றார் திரு ஹெங்.
"வருங்காலத்தில் சங் நீல உத்தமா ரோடும் சங் நீல உத்தமா பொல்வார்டும் சாங் நீல உத்தமா உயர்நிலைப்பள்ளியின் ஸ்தூல நினைவுச்சின்னமாகத் திகழும் என்பதை நான் விரும்புகிறேன். இந்தப் பள்ளியில் படித்தவர்களை அதன் வரலாற்றை வருங்காலத் தலைமுறையினரிடம் பகிர்ந்துகொள்ள இந்த இடம் ஏற்றதாக இருக்கும்," என்றார் திரு ஹெங்.
தென்கிழக்காசியாவின் புராதன பேரரசுகளில் ஒன்றான பலேம்பாங்கின் இளவரசராக இருந்த சங் நீல உத்தமாவை சிங்கப்பூர் தனது இருநூற்றாண்டு நிறைவாண்டில் நினைவுகூருவதாகத் திரு ஹெங் குறிப்பிட்டார். 1299ல் சிங்கப்பூருக்குப் பெயர் சூட்டியவர் இவர்தான் என நம்பப்படுகிறது.
அப்பர் அல்ஜுனிட் ரோட்டில் இருந்த சங் நீல உத்தமா உயர்நிலைப்பள்ளி 1961ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. மவுண்ட்பேட்டன் ரோட்டில் துன் செரி லானாங் உயர்நிலைப்பள்ளி 1963ல் திறக்கப்பட்டது.
இந்த இரண்டு மலாய்வழி உயர்நிலைப்பள்ளிகளின் திறப்பு சிங்கப்பூரின் மலாய்க்கல்வியின் வளர்ச்சியில் முக்கிய மைல் கல்லாகப் பார்க்கப்பட்டது. பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின்போது மந்தமாக இருந்த மலாய் மொழிக்கல்வியின் நிலைமை இந்தப் பள்ளிகளால் முன்னேற்றம் கண்டதாகக் கருதப்படுகிறது. இருந்தபோதும், 1980களில் மாணவர் சேர்க்கையின் குறைவால் அவ்விரண்டு பள்ளிகளும் தங்களது செயல்பாடுகளை நிறுத்தின.

