பொருளியல் உறவை வலுப்படுத்த வாய்ப்புள்ளது

பொருளியல் உறவை வலுப்படுத்த வாய்ப்புள்ளது

2 mins read
e2186c02-d79f-487a-b6c5-1db528dcd567
தாய்லாந்தின் ஆசியான் உச்சநிலைக்கூட்டத்தில் பிரதமர் லீ சியன் லூங். (படம்: ராய்ட்டர்ஸ்) -

உலகப் பொருளியல் அதிகப்படியான சிரமங்களை எதிர்நோக்கி வரும் வேளையில், ஆசியான் உறுப்பு நாடுகளுக்கும் சீனாவுக்கு இடையே வலுவான பொருளியல் ஒத்துழைப்புக்கு மேலும் அதிகமான வாய்ப்புகள் இருப்பதாக பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.

தாய்லாந்து தலைநகர் பேங்காங்கில் நடைபெறும் 22வது ஆசியா-சீன உச்சநிலை மாநாட்டில் நேற்று உரையாற்றிய அவர், ஆசியான்-சீன தடையற்ற வர்த்தக ஒப்பந்த மேம்பாட்டு நடைமுறையை முழுமையாக செயல்படுத்துவது முக்கியம் எனக் கூறினார். சீன சந்தைக்குள் தொழில் நிறுவனங்கள் கால்பதிக்க உதவுவதே இந்த மேம்பாட்டு நடைமுறையின் இலக்கு.

"ஆசியானின் ஆகப் பெரிய வர்த்தகப் பங்காளியாக சீனா இருந்தபோதிலும், பொருளியல் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான குறிப்பிடத்தக்க வாய்ப்புகள் உள்ளன," என்று திரு லீ சுட்டினார்.

ஆசியானும் சீனாவும் தொடர்பை வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். ஆசியான்-சீன போக்குவரத்து ஒப்பந்தம் முழுமையாக தாராளமயமாவதால் புதிய தொழில் வாய்ப்புகளைக் கொண்டு வருவது மட்டுமல்லாமல் மக்களையும் தொழில் நிறுவனங்களையும் ஒன்றிணைக்கவும் அது உதவும் என்று திரு லீ விவரித்தார். ஆசியானுக்கும் சீனாவுக்கும் இடையே உள்ள உறவை மேம்படுத்தும் அதே வேளையில், அவற்றுக்கு இடையே கூடுதல் ஒத்துழைப்புக்கான புதிய அம்சங்கள் இருப்பதாக அவர் சொன்னார்.

"மின்னிலக்க யுகம் தரும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி சவால்களை எப்படி எதிர்கொள்ள முடியும் என்பதற்கு அறிவார்ந்த நகர ஒத்துழைப்புத் திட்டம் தொடர்பில் தலைவர்களின் அறிக்கை ஒரு சிறந்த உதாரணம்.

"ஆசியான் அறிவார்ந்த நகரங்கள் கட்டமைப்பின் மூலம் நகரங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு, பொருளியல்களை மேலும் ஒருங்கிணைக்க உதவும்," என்று திரு லீ கூறினார்.

சிங்கப்பூர், ஜோகூர் பாரு, யங்கூன், நோம் பென், வியன்தியான் உள்ளிட்டவை அக்கட்டமைப்பில் அடங்கும்.