கருமுட்டைகளை உறைய வைப்பதற்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் சிங்கப்பூர் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கருமுட்டைகளை உறைய வைக்கும் மருத்துவ முறை சிங்கப்பூரில் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், மருத்துவக் காரணங்களுக்காக கருமுட்டைகளை இங்கு உறைய வைக்க முடியும். உதாரணத்திற்கு, 'கீமோத்தெரப்பி' சிகிச்சை முறைக்கு உட்படுத்தப்படுபவர்கள் கருமுட்டைகளை உறைய வைக்க இங்கு அனுமதி உண்டு. ஏனெனில், கருத்தரிப்பை 'கீமோத்தெரப்பி' பாதிக்கக்கூடும்.
கருமுட்டைகளை உறைய வைக்க எண்ணுபவர்கள் பெரும்பாலும் 30 வயதைக் கடந்தவர்களாவர். நிபுணத்துவத் திறன் தேவைப்படும் பணிகளில் உள்ள இந்தப் பெண்கள், தங்களது வாழ்க்கைத் துணையை இன்னும் தேடாமல் இருக்கலாம், அல்லது தாங்கள் பழகும் ஆண்கள் வாழ்க்கைத் துணையாவதற்கு பொருத்தமானவர்களா என்பதை இன்னும் முடிவெடுக்காமல் இருக்கலாம்.
கருமுட்டைகளை உறைய வைக்க பெரும்பாலான பெண்கள் மலேசியா அல்லது தாய்லாந்துக்குச் செல்கின்றனர். ஒரு சிலர் ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்கின்றனர். கருமுட்டைகளை உறைய வைப்பதால் பிற்காலத்தில் திருமணமாகி குழந்தை பெறுவதற்கான சாத்தியம் உள்ளதால் பெண்கள் சிலர் இந்த முடிவை எடுக்கின்றனர். ஆனால், கருமுட்டைகளை உறைய வைப்பதற்கான செலவு அதிகம். மலேசியாவில் இதற்கான செலவு $5,000லிருந்து தொடங்குகிறது. அமெரிக்காவில் இதற்கான செலவு $16,000ஐ எட்டலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மருத்துவக் காரணங்களைத் தவிர்த்து மற்ற காரணங்களுக்காகவும் பெண்கள் கருமுட்டைகளை இங்கு உறைய வைக்க அனுமதிப்பதற்கான சாத்தியம் குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் கடந்த வாரம் செய்தி வெளியிட்டிருந்தது.
அரசாங்கம் அப்படி இதனை இங்கு அனுமதித்தால், சிங்கப்பூரில் குறைவாக உள்ள குழந்தை பிறப்பு விகிதம் உயரலாம் எனக் கூறப்படுகிறது. காரணம், திருமணத்தை ஒத்திவைக்கும் சிங்கப்பூரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் வேளையில், வயது ஏறிவிடுவது உள்ளிட்ட பல காரணங்களுக்காக குழந்தை பெற்றுக்கொள்ள பெண்கள் பலர் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.

