சங் நீல உத்தமாவின் பெயரில் புதிய சாலை அறிவிப்பு

சங் நீல உத்தமாவின் பெயரில் புதிய சாலை அறிவிப்பு

2 mins read

புதிதாக அமையவிருக்கும் பிடாடாரி வட்டாரத்தில் மலாய்வழி கல்வி முறையைக் கொண்ட சங் நீல உத்தமா உயர்நிலைப் பள்ளி முன்பு இருந்த இடத்திற்குப் பக்கத்திலுள்ள ஒரு சாலைக்கு 'சங் நீல உத்தமா ரோடு' என்ற பெயர் சூட்டப்படும். துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் இதனை நேற்று அறிவித்தார்.

சிங்கப்பூரில் நிறுவப்பட்ட மலாய்வழி கல்வியை வழங்கிய முதல் இரண்டு உயர்நிலைப் பள்ளிகளாக சங் நீல உத்தமா உயர்நிலைப் பள்ளியும் துன் செரி லானாங் உயர்நிலைப் பள்ளியும் திகழ்ந்தன. அந்தப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களும் கற்பித்த ஆசிரியர்களும் மீண்டும் ஒன்றுகூடிய நிகழ்ச்சி ஒன்றில் திரு ஹெங் உரையாற்றினார். ஆர்ச்சர்ட் ஹோட்டலில் நடைபெற்ற அந்நிகழ்ச்சியில் சுமார் 800 பேர் கலந்துகொண்டனர்.

"சிங்கப்பூரின் மலாய் கல்வியில் சங் நீல உத்தமா உயர்

நிலைப் பள்ளி முக்கிய பங்காற்றி வருவதால் மலாய் சமூகம் இந்தக் கோரிக்கையை முன்வைத்து வந்தது," என்று திரு ஹெங் கூறினார். பிடாடாரி வட்டாரத்தில் அமையவிருக்கும் புதிய மரபுடைமை பாதையின் ஒரு பகுதி 'சங் நீல உத்தமா பொலிவார்ட்' என்றும் அழைக்கப்படும். முன்னதாக, அப்பர் அல்ஜுனிட் ரோட்டின் ஒரு பகுதியாக இருந்த அது இப்போது பாதசாரிகள் மட்டுமே செல்லக்கூடியதாக இருக்கும் என்றார் திரு ஹெங்.

இந்தப் பாதை, புதிய பிடாடாரி பூங்காவைக் கடந்து போகும். பிடாடாரி வட்டாரத்தைப் பற்றிய கடந்தகால நினைவுகளைப் பற்றிய சில குறிப்புகள் இந்த இடத்தில் வைக்கப்படும்.

பிடாடாரி வட்டாரம் 2022ஆம் ஆண்டுக்குள் உருவாக்கப்படும்.

இந்தச் சாலைக்கு சங் நீல உத்தமாவின் பெயரைச் சூட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான 82 வயது வான் ஹுசேன் ஸூஹ்ரியும் 73 வயது யாத்திமான் யூசோஃபும் குரல்கொடுத்து வந்ததை திரு ஹெங் குறிப்பிட்டார். பெயர் மாற்றத்தைக் கோரி அவர்கள் இருவரும் அரசாங்கத்திலுள்ள சிலருக்குக் கடிதம் அனுப்பியதாகவும் அவர் கூறினார்.

சங் நீல உத்தமா உயர்நிலைப்பள்ளியின் துணை முதல்வராக திரு வான் ஹுசேன் பணியாற்றினார். திரு யாத்திமான் துன் செரி லானாங் உயர்நிலைப்

பள்ளியின் முன்னாள் மாணவர்.