ஒரு நாயைச் சித்ரவதை செய்த ஆடவர் ஒருவர், அதனைச் சொந்தமாகக் காணொளி எடுத்து வெளியிட்டதைத் தொடர்ந்து சிங்கப்பூர் விலங்குவதைத் தடுப்புச் சங்கமும் போலிசாரும் விசாரணை நடத்தி வருகின்றன. அந்தக் காணொளி சமூக ஊடகங்களில் பரவியது குறித்து தனது வாசகர்கள் தகவல் அளித்ததாக ஸ்டாம்ப் இணையச் செய்தித்தளம் தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட ஆடவர் அந்த நாயை மோட்டார்சைக்கிள் தலைக் கவசத்தைப் போல இருக்கும் ஒரு பொருளால் அடிப்பதைக் காணொளி காட்டுகிறது. வலியால் கூச்சலிட்ட அந்த நாய் தப்பிக்க முயன்றபோதும் அதனை விடாது பின்தொடர்ந்த ஆடவர், அதன் ரோமத்தைத் தீயிலிட்டுக் கொளுத்தியதை அந்தக் காணொளி காட்டுகிறது.
இது குறித்து மேல் விவரம் தெரிந்தவர்கள் தன்னை அணுகுமாறு விலங்குவதைத் தடுப்புச் சங்கம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பொதுமக்களிடம் அவசர வேண்டுகோள் விடுத்தது.
தெம்பனீஸிலுள்ள ஓர் அடுக்குமாடி வீட்டுக்குச் சென்று இதன் தொடர்பான விசாரணையை நடத்தியதாகச் சங்கம் பிற்பாடு கூறியது.

