நடைபாதைகளில் மின்-ஸ்கூட்டர்களுக்குத் தடை

நடைபாதைகளில் மின்-ஸ்கூட்டர்களுக்குத் தடை

1 mins read
9360157b-13b5-493c-800a-67f32e460ebc
-

மின்-ஸ்கூட்டர்கள் நாளை (நவம்பர் 5ஆம் தேதி) முதல் நடைபாதைகளில் தடை செய்யப்படும். இந்தத் தடையை மீறுவோருக்கு 2000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது மூன்று மாதச் சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

இந்த ஆண்டின் இறுதி வரை, தடையை மீறும் ஓட்டுநர்களுக்கு அதிகாரிகள் பெரும்பாலும் எச்சரிக்கை கடிதங்களை அனுப்புவர். ஆனால் அடுத்த ஆண்டு முதல், அதிகாரிகளின் அணுகுமுறை இந்தத் தவறுகளைச் சிறிதும் சகித்துக்கொள்ளாத விதத்தில் இருக்கும். இந்தத் தடைக்குப் பிறகு மின்-ஸ்கூட்டர்களை மிதிவண்டி பாதைகளில் மட்டும்தான் பயன்படுத்த முடியும்.

இந்தத் தடை, மிதிவண்டி, இயந்திர சக்கரநாற்காலி போன்ற தனிநபர் நடமாட்ட உதவிக்கருவிகளைப் பாதிக்காது. இருந்தபோதும் ஹோவர்பார்டுகள், ஒற்றைச் சக்கரம் கொண்ட சைக்கிள்கள் உள்ளிட்ட வேறு சில சாதனங்களுக்கு இந்தத் தடை கட்டம் கட்டமாக விரிவு செய்யப்படும்.

கடுமையாக்கப்பட்டுள்ள இந்த நிலைப்பாட்டை போக்குவரத்து மூத்த துணையமைச்சர் லாம் பின் மின் நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்தார். "கடந்த இரண்டு ஆண்டுகளில், மோட்டார் இயந்திரங்களைக் கொண்டுள்ள தனிநபர் நடமாட்டச் சாதனங்களின் பாதுகாப்பான பயன்பாட்டை மேம்படுத்த நாங்கள் பெருமளவு முயற்சிகளை எடுத்து வந்தோம். அப்படி இருந்தபோதும், விதிமுறைகளுக்குக் கட்டுப்படாத சாதனங்களைப் பயன்படுத்தும் ஓட்டுநர்களையும் ஆபத்தான விதத்தில் ஓட்டும் ஓட்டுநர்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது," என்றார் டாக்டர் லாம்.