கடுங்கோபத்தின் காரணமாக தனது இரண்டு வயது பெண் குழந்தையை இருமுறை தரையில் வீசி அவளைக் கொன்ற 30 வயது மாதுக்கு நேற்று ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. கடந்தாண்டு ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி நடந்த அந்தச் சம்பவத்தின்போது அந்தத் தாயார் மிகப்பெரிய மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் அந்தப் பெண் தன் மீது சுமத்தப்பட்டுள்ள நோக்கமில்லாக் கொலை குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டுள்ளார்.
ஆறு பிள்ளைகளுக்குத் தாயாராக இருந்த அந்தப் பெண்ணின் பிள்ளைகளில் இருவர் நோய்வாய்ப்பட்டு இறந்ததை அடுத்து அவர், மன அழுத்ததால் மிகவும் சிரமப்பட்டதாக அவரது வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். தனது மனநோயைப் பற்றி பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்குத் தெரியவில்லை என்றும் அந்த வழக்கறிஞர் தெரிவித்தார். இந்தச் சம்பவம் மிகவும் துரதிஷ்டவசமானது என்று தண்டனையை விதித்த நீதிமன்ற ஆணையாளர் வின்சன்ட் ஹூங் தெரிவித்தார். அந்தப் பெண்ணின் சூழ்நிலை மிகக் கடினம் என்று ஒப்புக்கொண்டார். ஆயினும், தன்னைத் தற்காக்க இயலாத ஒரு பிள்ளையை அந்தத் தாயார் எந்தத் தூண்டுதலுமின்றி தாக்கியதால் நீதியின் பெயரில் அந்தத் தண்டனையை விதித்ததாக அந்த நீதிபதி கூறினார்.

