மசே நிதி ஓய்வூதியத் திட்டம்: 60,000 பேர் அதிக மாதாந்திர வழங்கீடு பெறுவார்கள்

3 mins read
c7f45b62-a7c7-4e7f-99dd-040932ba7389
-

மத்திய சேம நிதி விதிமுறைகளில் ஏற்படவுள்ள மாற்றங்களைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 60,000 பேர், அல்லது ஓய்வூதிய நிதித் திட்டத் திட்டத்தின் (ஆர்எஸ்எஸ்) உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானவர்கள் அடுத்த ஆண்டு முதல் கூடுதலான வழங்கீட்டைப் பெறுவர்.

1958க்கு முன்னர் பிறந்த உறுப்பினர்களுக்கான மத்திய சேம நிதி (சிபிஎஃப்) ஓய்வூதிய நிதித் திட்டமான ஆர்எஸ்எஸ் மூலம் பணம் பெறுவது, அடுத்த ஆண்டு முதல் 90 வயது வரையாகிறது. தற்போது இது 95 வயது வரை உள்ளது.

மசே நிதிச் சட்டத் திருத்தங்கள் குறித்த விவாதத்தின்போது உரையாற்றிய மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ நேற்று இதனை நாடாளுமன்றத்தில் அறிவித்தார். புதிய விதிமுறைகள் 2020 ஜூலை 1 முதல் 65 வயதாகும் அனைத்து ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களுக்கும் பொருந்தும். மேலும் தற்போது இத்திட்டத்தின் கீழ் நிதி பெறுவோர் 2020 ஜனவரி 1 முதல் புதிய விதிமுறையில் கீழ் வருவர்.

ஏறக்குறைய 160,000 ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் நிதி பெறுவதற்கான தகுதி வயதை அடைந்துவிட்டதுடன் நிதியைப் பெறவும் தொடங்கிவிட்டனர்.

மசே நிதிச் சட்டத் திருத்தம், 'சம்பாதித்துக் கொண்டே பணம் செலுத்துவது' (CAYE) எனும் முன்னோடித் திட்டத்திற்கும் வழிவகுக்கிறது. அரசு, பொதுத்துறை நிறுவனங்களுக்காக நேரடியாகப் பணிபுரியும் 6,000 தன்னுரிமைத் தொழிலாளர்களின் வருமானத்தில் ஒரு பகுதி தானாகவே அவர்களது மெடிசேவ் கணக்கில் செலுத்தப்பட இந்தத் திட்டம் வகை செய்கிறது.

ஆர்எஸ்எஸ்ஸில் செய்யப்பட்ட மாற்றங்கள் குறித்துப் பேசிய திருவாட்டி டியோ, தற்போதைய 95 வயது வரை நிதிபெறும் காலம் மிக நீளமானது என்ற கருத்தைத் தொடர்ந்து விதிகள் மறுஆய்வு செய்யப்பட்டதாகக் கூறினார்.

ஐந்து உறுப்பினர்களில் ஒருவர் மட்டுமே 95 வயதைத் தாண்டி வாழ்வார்கள் என எதிர்பார்க்கப்படு வதாக அவர் சொன்னார். மேலும் காலமாகிவிட்ட உறுப்பினர்கள் இறந்தபோது அவர்களது ஓய்வூதியக் கணக்குகளில் மீதமுள்ள தொகை, அவர்கள் சற்றே அதிக ஆர்எஸ்எஸ் நிதியைப் பெற்றிருக்கலாம் எனக் காட்டுவதாக அவர் கூறினார்.

இன்று 65 வயதும் அதற்கு மேற்பட்ட வயதுமுடைய பெரும்பாலான மசேநிதி உறுப்பினர்கள் ஆர்எஸ்எஸ் திட்டம் மூலம் ஓய்வூதியத் தொகையைப் பெறுகின்றனர்.

மசேநிதி லைஃப் உறுப்பினர்களில் முதல் பிரிவினர், வரும் 2023ஆம் ஆண்டில் நிதி பெறுவதற்கான வயதை எட்டுவர். அவர்கள் வாழும் வரை இந்த ஓய்வூதிய நிதியைப் பெறுவர். 65 வயதில் ஓய்வூதியக் கணக்கில் குறைந்தபட்சம் $60,000 வைத்திருக்கும் உறுப்பினர்கள் தானாகவே மசேநிதி லைஃப் திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள்.

ஆர்எஸ்எஸ் நிதி வழங்கீடானது, தற்போது செலுத்தும் தகுதி பெறும் 65 வயதிலிருந்து 20 ஆண்டுகள் வரை அல்லது அவர்களின் ஓய்வூதிய கணக்கிலுள்ள நிதி தீர்ந்துபோகும் வரை இடம்பெறுகிறது.

அத்துடன், ஓய்வூதியக் கணக்கில் கிடைத்த கூடுதல் வட்டியின் அளவைப் பொறுத்தும் நிதி வழங்கும் காலம் நீட்டிக்கப்படுகிறது. 55 வயதிலிருந்து பெற்ற கூடுதல் வட்டித் தொகை முழுவதும் 20 ஆண்டு தவணைக் காலத்துக்கும் அப்பால், உறுப்பினர்களுக்கு 95 வயதாகும் வரை நிதி வழங்கீட்டை நீட்டிக்கப் பயன்படுகிறது.

திருத்தப்பட்ட நிதி வழங்கீட்டு விதிமுறையின்படி, 55 வயதிலிருந்து ஆர்எஸ்எஸ் நிதி வழங்கீடு தொடங்கும்வரையில் உறுப்பினர் பெற்ற கூடுதல் வட்டி நிதி வழங்கீட்டை அதிகரிக்கப் பயன்படுத்தப்படும். உறுப்பினர் நிதி வழங்கீடு தொடங்கிய பிறகு சம்பாதித்த கூடுதல் வட்டி, நிதி பெறும் காலத்தை 90 வயது வரை நீட்டிக்கப் பயன்படுத்தப்படும்.

உதாரணமாக, தற்போதைய விதிமுறைகளின் கீழ் ஆர்எஸ்எஸ் நிதி வழங்கீட்டை இன்று பெறத்தொடங்கும் 65 வயதான ஒருவர் 30 ஆண்டுகளுக்கு மாதம் $470 பெறுவர். புதிய விதிமுறைகளின் கீழ், அவர் பெறும் மாதாந்திர தொகை $520 ஆக அதிகரிக்கும். ஆனால் 25 ஆண்டுகளுக்குப் பிறகு 90 வயதில் இந்த நிதி வழங்கீடு முடிந்துவிடும்.