ஆர்டிஎஸ் ரயில் திட்டம்: 2020 ஏப்ரலுக்குள் 3 ஒப்பந்தங்கள்

ஆர்டிஎஸ் ரயில் திட்டம்: 2020 ஏப்ரலுக்குள் 3 ஒப்பந்தங்கள்

1 mins read
003ec2d2-4876-41f9-87f5-70970356c3bd
ஆர்டிஎஸ் ரயில் திட்டத்தில் அமையவுள்ள உட்லண்ட்ஸ் நார்த் நிலையத்தின் மாதிரி வடிவமைப்பு. படம்: நிலப் போக்குவரத்து ஆணையம் -

சிங்கப்பூரும் மலேசியாவும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதக் கடைசிக்குள் ஆர்டிஎஸ் ரயில் திட்டம் தொடர்பான மூன்று ஒப்பந்தங்களில் கையெழுத்திடவேண்டும் என போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் தெரிவித்திருக்கிறார்.

ஆர்டிஎஸ் ரயில் திட்டத்தை மூன்றாவது முறையாக 2020 ஏப்ரல் 30 வரை ஒத்திவைக்க அக்டோபர் 29ஆம் தேதி மலேசியா கேட்டுக்கொண்டதாகத் திங்கட்கிழமை (நவம்பர் 4) நாடாளுமன்றத்தில் வெளியிட்ட எழுத்துபூர்வ பதிலில் திரு கோ தெரிவித்தார்.

இருநாட்டு ஒத்துழைப்பைக் கருத்தில் கொண்டு, இந்த ஆறு மாத ஒத்திவைப்புக்கு சிங்கப்பூர் இணங்கியதாக அவர் கூறினார்.

மலேசியா ஆர்டிஎஸ் ரயில் திட்டத்தைச் செயல்படுத்த தீர்மானித்திருப்பதாக அக்டோபர் 31ஆம் தேதி மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது அறிவித்தார். ஆனால், திட்டத்தை ஒத்திவைக்க கோரிக்கை விடுத்திருப்பதை அவர் குறிப்பிடவில்லை.

திட்டத்தில் மலேசியா பரிந்துரைத்திருக்கும் மாற்றங்களைப் பற்றி இரு தரப்பினரும் கலந்து பேசி வருவதாகவும், அந்த மாற்றங்களைச் செயல்படுத்த இருதரப்பு ஒப்பந்தத்தில் திருத்தம் செய்யப்படவேண்டும் என்றும் திரு கான் கியாம் போவுக்கு அளித்த பதிலில் திரு கோ குறிப்பிட்டிருந்தார்.

இது தவிர, மேலும் இரு ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்படவேண்டும் என்றார் அவர்.

ஆர்டிஎஸ் ரயில் திட்டத்தின் தொடர்பிலான மூன்று ஒப்பந்தங்களின் விவரங்களை ஆராய்வதற்காகாவே இந்த ஆறு மாத இடைவெளி கோரப்பட்டிருப்பதாக மலேசிய போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோ சியோ ஃபூக் குறிப்பிட்டுள்ளார்.