தவணைக் கொள்முதல் திட்டங்களால் கடன் பிரச்சினைகள் அதிகரிப்பு

தவணைக் கொள்முதல் திட்டங்களால் கடன் பிரச்சினைகள் அதிகரிப்பு

1 mins read
1cf0a607-1ee4-4bd2-8ab1-292a223fbaa8
வீட்டுச் சாதனங்களைத் தவணைக்கு வாங்கும் வாடிக்கையாளர்களுக்குச் சில கடைகள் அதிக வட்டி விதிப்பதால், இத்தகைய நடைமுறைகளைக் கட்டுப்படுத்த கெடுபிடியான கொள்கைகள் தேவை என நாடாளுமன்ற உறுப்பினர்களும் சமூக சேவையாளர்களும் குரல் கொடுத்துள்ளனர். கோப்புப்படம் -

கைவசம் ரொக்கம் இல்லாதபோது $6,000 பெறுமானமுள்ள தொலைக்காட்சியைத் தவணைக் கொள்முதல் திட்டத்தின்கீழ் வாங்கி, மாதந்தோறும் கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் கட்டுவது சிலருக்கு நல்ல யோசனையாகத் தோன்றலாம். ஆனால், ஐந்து ஆண்டுகளில் அந்தத் தொலைக்காட்சிக்கு மொத்தமாக $16,600 கட்டியிருப்பதை உணரும்போது நிலைமை வேறுவிதமாக இருக்கும்.

வீட்டுச் சாதனங்களைத் தவணைக்கு வாங்கும் வாடிக்கையாளர்களுக்குச் சில கடைகள் அதிக வட்டி விதிப்பதால், இத்தகைய நடைமுறைகளைக் கட்டுப்படுத்த கெடுபிடியான கொள்கைகள் தேவை என நாடாளுமன்ற உறுப்பினர்களும் சமூக சேவையாளர்களும் குரல் கொடுத்துள்ளனர்.

தவணைக் கொள்முதல் திட்டங்களால் எழும் கடன் பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. தவணைக் கொள்முதல் திட்டங்களுக்கென தனிப்பட்ட கட்டுப்பாடு விதிமுறைகள் இல்லாவிட்டாலும், பொருள் விற்பனை சட்டம், பயனீட்டாளர் பாதுகாப்பு (நியாய வணிகம்) சட்டம் போன்ற பொதுவான சட்டங்களுக்கு அவை உட்படுகின்றன.

ஆனால், வட்டித்தொழிலர்கள், நிதி நிறுவனங்கள் போன்ற கடனளிப்பு நிறுவனங்களுக்குக் கடன் வரம்புகள் உள்ளிட்ட கட்டுப்பாட்டு விதிமுறைகள் நடப்பிலுள்ளன.

இதுபற்றி மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சக்தியாண்டி சுபாட், டியோ செர் லக் ஆகியோர், மேற்கொண்டு ஏதாவது செய்யமுடியுமா எனக் கேட்டனர்.

இதற்குப் பதிலளித்த வர்த்தக தொழில் அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் டான் வு மெங், தொழில்துறையின் நடைமுறைகளையும் விதிமுறைகளையும் அரசாங்கம் பரிசீலித்து வருவதாகத் தெரிவித்தார்.

இந்தப் பரிசீலனை "தொடர்வதாக" வர்த்தக தொழில் அமைச்சு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் தெரிவித்தது.