தடை அமலான முதல் நாளான நேற்று நடைபாதையில் மின்ஸ்கூட்டர்கள் இல்லை

தடை அமலான முதல் நாளான நேற்று நடைபாதையில் மின்ஸ்கூட்டர்கள் இல்லை

2 mins read
440c92c6-0f70-4b6b-ab9f-cffe98a36ddb
வெஸ்ட் கேட் மால் கடைத்தொகுதிக்கு வெளியில் மின்ஸ்கூட்டர் ஓட்டி வந்த ஒருவருக்கு அதிகாரி எச்சரிக்கைக் கடிதம் வழங்குகிறார். ஏறக்குறைய நூற்றுக்கு மேற்பட்டோருக்கு இதுபோன்று எச்சரிக்கைக் கடிதம் அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மின்ஸ்கூட்டரை நடைபாதையில் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை அமலுக்கு வந்த முதல் நாளான நேற்று சிங்கப்பூரின் நடைபாதைகளில் மின்ஸ்கூட்டர் பயன்படுத்துவது தவிர்க்கப்பட்டது.

இருப்பினும் உணவுப் பொட்டலங்களை விநியோகிக்கும் சிலர் தொடர்ந்து மின்ஸ்கூட்டர் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

ஜூரோங்கின் கிழக்குப் பகுதியில் ஜூரோங்கின் கேட்வே ரோட்டிலும் நேற்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் மேற்கொண்ட மூன்று மணி நேரச் சோதனையில் ஏறக்குறைய ஏழு உணவு விநியோகிப்பாளர்கள் மின்ஸ்கூட்டர் பயன்படுத்தியது தெரியவந்தது. நிலப் போக்குவரத்து அதிகாரிகள் ஏழு பேர் அவ்விடத்தில் சோதனையில் ஈடுபட்டதாக அந்த நாளிதழ் கூறியது. முதல் தடவையாக விதிமீறி நடைபாதைகளில் மின்ஸ்கூட்டர் ஓட்டுவோருக்கு அதிகாரிகள் எச்சரிக்கைக் கடிதம் அளிப்பர்.

இந்த நடைமுறை இவ்வாண்டு இறுதி வரை மட்டுமே நீடிக்கும். அடுத்த ஆண்டு முதல் கடுமையான அணுகுமுறை பின்பற்றப்படும்.

நடைபாதையில் மின்ஸ்கூட்டர் ஓட்டிய குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் $2,000 அபராதம் அல்லது மூன்று மாதங்கள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

அங் மோ கியோ, தோ பாயோ ஆகிய பகுதிகளில் நடைபாதைகளில் மின்ஸ்கூட்டர் ஓட்டுபவர்களை எச்சரிக்கும் வகையில் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக நேற்று நிலப் போக்கு வரத்து வாரியம், தன் ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருந்தது.

புதிய விதிகளின்படி நாடு முழுவதுமுள்ள 440 கி.மீ. சைக்கிளோட்டப் பாதைகளில் மட்டுமே மின்ஸ்கூட்டரை ஓட்ட முடியும். இது 2030ஆம் ஆண்டிற்குள் மும்மடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுநாள் வரை, 5,500 கி.மீ. நீளமுடைய நடைபாதைகளையும் மின்ஸ்கூட்டர் ஓட்டிகள் பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் நடைபாதையில் மின்ஸ்கூட்டர் ஓட்ட விதிக்கப்பட்டிருக்கும் தடைக்கு ஏற்ப தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும். இதனால் ஏற்படும் காலதாமதத்தை புரிந்துகொள்ள வேண்டும் என வாடிக்கையாளர்களை கிரேப் ஃபுட் கேட்டுக் கொண்டுள்ளது. உணவு விநியோக சேவையில் ஈடுபட்டுள்ள ஃபுட்பாண்டா, டெலிவரூ ஆகிய பெரிய நிறுவனங்களில் கிரேப்ஃபுட் நிறுவனமும் ஒன்று. "உணவு விநியோகச் சேவையில் ஈடுபடுவோர் மூன்றில் ஒருவர் மின்ஸ்கூட்டரையே நம்பியுள்ளனர். இந்தத் தடைக்குப் பின்னர் அவர்கள் இதற்கு மாற்று வழியைத் தேடுவர் என்றும் கிரேப்ஃபுட் நிறுவனம் தெரிவித்துள்ளது.