நாடாளுமன்றம்: 'தணிக்கையாளர்களுடன் பாட்டாளிக் கட்சியினர் ஒத்துழைக்கவில்லை'

நாடாளுமன்றம்: 'தணிக்கையாளர்களுடன் பாட்டாளிக் கட்சியினர் ஒத்துழைக்கவில்லை'

3 mins read
a3e3001f-0025-4bfd-a0a0-fe77ccd7282b
-

ஏலக்குத்தகைக்கு அழைப்பு விடுக்காமல் அல்ஜுனிட்-ஹவ்காங் நகர மன்றத்துக்கு நிர்வாக முகவரை நியமித்தது ஏன் என்று கேள்வி எழுப்பப்பட்டபோது பாட்டாளிக் கட்சி 'சாக்குப்போக்குகள்' கூறி வந்தது என்று சட்ட மூத்த துணை அமைச்சர் எட்வின் டோங் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். மேலும், முறையான தணிக்கை செய்ய முற்பட்ட அல்ஜுனிட்-ஹவ்காங் நகர மன்றத்தின் கணக்குத் தணிக்கையாளர்கள் உட்பட மற்ற தணிக்கையாளர்களுடனும் அக் கட்சி ஒத்துழைக்கவில்லை என்றும் திரு டோங் கூறினார்.

அல்ஜுனிட்-ஹவ்காங் நகர மன்றத்தின் ஆளுமையின் தொடர்பில் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த தீர்மானத்துக்கு ஆதரவாக திரு டோங் பேசினார். தங்கள் நிர்வாக முகவராக எஃப்எம் சொலுஷன்ஸ் அண்ட் சர் விசஸ் நிறுவனத்தை (எஃப்எம் எஸ்எஸ்) நியமித்ததற்கு பாட்டாளிக் கட்சி கூறிய மூன்று 'சாக்கு போக்குகளை' திரு டோங் பட்டியலிட்டார்.

"முதலாவது, அப்போதைய நிர்வாக முகவர் சிபிஜி நிறுவனம் தனது சேவைகளை திடீரென நிறுத்திக்கொண்டதால், அவசர அவசரமாக 'எஃப்எம்எஸ்எஸ்' நிறுவனம் நியமிக்கப்பட்டது என்று அக்கட்சி கூறியது. இது முற்றிலும் பொய்யானது. இது தங்கள் நலனைப் பாதுகாத்துக்கொள்ளும் அதேவேளையில், தங்கள் குடியிருப்பாளர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பதைக் காட்டுகிறது.

"இரண்டாவதாக, எஃப்எம்எஸ்எஸ் நிறுவனம் அவசரத்துக்காக நியமிக்கப்பட்டது என்று அக்கட்சி கூறுவதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. மாறாக, வேண்டுமென்றே சிபிஜி நிறுவனத்தை விலக்கி வைத்து, எஃப்எம்எஸ்எஸ் நிறுவனத்தை நியமிக்கவே அவ்வாறு செய்யப்பட்டது.

"மூன்றாவதாக, மக்கள் செயல் கட்சிக்குச் சொந்தமான 'ஏஐஎம்' நிறுவனம், எஃப்எம்எஸ்எஸ் நிறுவனத்தின் சேவைகளை ரத்து செய்தபோது, எஃப்எம்எஸ்எஸ் நிறுவனம் ஏலக் குத்தகைக்கு அழைப்பு விடுக்க இன்னும் சில காலம் இருந்ததால் சற்று தாமதித்தோம் என்று பாட்டாளிக் கட்சி கூறியதும் முற்றிலும் பொய்.

"மாறாக, நீதிமன்ற விசாரணையின்போது ஏஐஎம் நிறுவனம் தமது சொந்த நகர மன்றத்தில் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்தது என்றார் சில்வியா லிம். ஆனால், எஃப்எம்எஸ்எஸ் நிறுவனத்தின் ஹாவ் வெங் ஃபான் நீதிமன்றத்தில் கூறுகையில், திருவாட்டி லிம் ஏஐஎம் நிறுவனத்தின் சேவைகளை நீட்டிக்க விரும்பவில்லை என்றார்," என்று விளக்கினார்.

பின்னர் மன்றத்தில் பேசிய எதிர்த்தரப்பு தலைவரும் அல்ஜுனிட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான பிரித்தம் சிங், மேல்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பு இன்னும் வெளியாகாமல் இருக்கும் இந்நேரத்தில் தங்கள் கட்சிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தீர்மானம் கொண்டு வந்ததை அவசர நடவடிக்கை' என்று பிரித்தம் சிங் வருணித்தார்.

ஆகவே, இத்தீர்மானத்தை மன்ற உறுப்பினர்கள் நிராகரிக்க வேண்டும் என்றும் திரு சிங் கேட்டுக்கொண்டார். தங்களுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தைத் தங்கள் கட்சி உறுப்பினர்கள் கவனமாக படித்திருப்பதாகவும் அத்தீர்மானத்துக்கு எதிராக பாட்டாளிக் கட்சியின் எல்லா உறுப்பினர்களும் வாக்களிப்பார்கள் என்றும் திரு சிங் கூறினார்.

பின்னர் பேசிய அல்ஜுனிட் குழுத் தொகுதியின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் ஃபைசல் மானாப், கடந்த 2015 பொதுத் தேர்தலில் தங்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களை ஏமாற்ற விரும்பவில்லை என்றும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறோம் என்றும் தெரிவித்தார்.