இவ்வாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் தொடங்கப்பட்ட புதிய வர்த்தகங்களின் விகிதம் கடந்த ஐந்து ஆண்டுகள் சராசரி விகிதத்தைவிட 25 விழுக்காடு குறைந்தது என்றும் இதற்கு உலகப் பொருளியலின் நிலையற்ற தன்மையும் சிங்கப்பூர் பொருளியலின் மெதுவடைவுமே காரணங்கள் என்றும் வர்த்தக தொழில் மூத்த துணை அமைச்சர் சீ ஹொங் டாட் தெரிவித்தார்.
2014க்கும் 2018க்கும் இடைப்பட்ட காலத்தில் 13,800 புதிய வர்த்தகங்கள் தொடங்கப்பட்டன. ஒப்புநோக்க இவ்வாண்டு முதல் ஒன்பது மாதங்களில் 9,900 புதிய வர்த்தகங்களே தொடங்கப்பட்டன என்று திரு சீ விவரித்தார்.
இவ்வாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் போக்கு வரத்து மற்றும் கிடங்கு, வர்த்தக சேவைகள் மற்றும் கட்டு மானம் ஆகிய துறைகளில் புதிய வர்த்தகங்கள் சரிவு கண்டன.
இதற்குத் தீர்வு காணும் வகையில், பொருளியலை வளர்க்கவும் நிறுவனங்கள் உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் புதிய வாய்ப்புகளைப் பற்றிக் கொள்ளவும் தமது அமைச்சு வழிவகைகளை ஆராய்ந்து வருகிறது. இதில், வேளாண்-தொழில்நுட்பம், துல்லிய மருத்துவம், ஆதரவு சேவை வழங்கும் நிறுவனங்கள் போன்ற புதிய துறைகளை உரு வாக்கி அதன் மூலம் நிறுவனங்கள் வெளிநாடுகளில் வர்த்தக வளர்ச்சி வாய்ப்புகளைப் பெருக்கிக்கொள்ளவும் அமைச்சு ஆராய்ந்து வருகிறது என்றும் திரு சீ கூறினார்.

