வனஉயிர்ப் பாதுகாவலருக்குப் புகழஞ்சலி செலுத்திய பிரதமர்

வனஉயிர்ப் பாதுகாவலருக்குப் புகழஞ்சலி செலுத்திய பிரதமர்

1 mins read
14230bf1-94aa-4cea-9c54-f2ea817e26bc
திரு சுபராஜ் ராஜதுறையைச் சிலமுறை சந்திக்க முடிந்தது தாம் செய்த பாக்கியம் என்றும் அவருடனான உரையாடல்களை ரசித்து மகிழ்ந்ததாகவும் பிரதமர் லீ சியன் லூங் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். (கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்) -

வனஉயிர்ப் பாதுகாவலரும் ஆலோசகருமான திரு சுபராஜ் ராஜதுரையின் மறைவு, சிங்கப்பூரிலுள்ள இயற்கை விரும்பிகளுக்கு மிகப் பெரிய இழப்பு என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 22ஆம் தேதி உறக்கத்திலேயே மாரடைப்பால் திரு சுபராஜின் உயிர் பிரிந்தது. இவருக்கு வயது 57.

இந்நிலையில், ஃபேஸ்புக் வழியாக பிரதமர் லீ இவருக்குப் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

"சிலமுறை அவரைச் சந்திக்க முடிந்தது நான் செய்த பாக்கியம். அவருடனான உரையாடல்களை ரசித்து மகிழ்ந்தேன். வனங்களில் பதுங்கியுள்ள உயிரினங்களைக் கண்டுபிடித்துச் சொல்வதில் தனித்திறன் கொண்டிருந்தார். இயற்கை மீது அவருக்கு அலாதி பிரியம்," என்று திரு லீ தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இயற்கை மீதான பேரார்வத்தினாலும் அறிவினாலும் சிங்கப்பூரர்கள் பலராலும் அறியப்பட்டவர் திரு சுபராஜ். சிங்கப்பூரின் வனஉயிர்களைப் பாதுகாப்பதில் இவர் அதிக அக்கறை செலுத்தி வந்தார். பல மேம்பாட்டுத் திட்டங்களில் இவர் ஆலோசகராகப் பணியாற்றியுள்ளார். மேம்பாட்டுப் பணிகளிலும் வனஉயிர் வாழிடங்களைக் காப்பதிலும் ஒரு சமநிலையைப் பேண அதிகாரிகளுக்கு இவர் உதவினார்.

கடந்த ஆண்டு செஸ்ட்நட் இயற்கைப் பூங்காவில் குரங்கு ஒன்று மரத்தில் அமர்ந்திருக்கும்படி தாம் எடுத்த படத்தையும் தமது பதிவுடன் பிரதமர் இணைத்திருந்தார்.

"இந்த மரத்தின் அருகே பல விலங்குகள் இருந்திருக்கலாம். அவை என் கண்களுக்குத் தெரியாமல் பதுங்கி இருந்திருக்கலாம். ஆனால், திரு சுபராஜால் அவற்றைக் கண்டு சொல்லியிருக்க முடியும்," என்றார் திரு லீ.