வட்டார விரிவான பொருளியல் பங்காளித்துவ ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை என்றாலும் அந்நாடு பிற்காலத்தில் அதில் சேர்வதற்கு ஏதுவாக அதற்கான கதவைத் திறந்து வைத்திருக்க வேண்டும் என்று பொருளியல் உறவுகளுக்கான அமைச்சர் எஸ் ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
மாண்டரின் ஓரியண்டல் ஹோட்டலில் நேற்று நடைெபற்ற 'ஏஷியா ஹவுஸ் குளோபல் டிரேட் டயலாக்' என்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் ஈஸ்வரன், இந்தியாவின் முடிவு ஏமாற்றமளித்தாலும் அந்த முடிவு நிரந்தரமானதாக இருக்க வேண்டும் என்பதில்லை என்றார்.
இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நாடுகள் ஒப்பந்தத்தின் நடைமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் கைவிடாமல் இந்தியா உரிய காலத்தில் ஒப்பந்தத்தில் சேர்ந்து கொள்வதை பரிசீலிக்கக் காத்திருப்பதாகக் கூறினார்.
"இந்த ஒப்பந்தத்தின் முழுப் பலனை அடைய இந்தியாவுடனான ஈடுபாட்டை நாம் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
இந்தியா ஒரு பெரிய சந்தை மட்டுமல்ல, அது இந்த வட்டார விநியோகக் கட்டமைப்பின் ஒரு முக்கியமான அங்கமும்கூட. எனவே, அந்நாடு இந்த ஒப்பந்தத்தில் இணைவது முக்கியமான ஒன்று," என்று திரு ஈஸ்வரன் கருத்துரைத்தார்.
உலகின் 15 நாடுகள் இணைந்துள்ள இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவை இணைப்பதற்கு தமது மனசாட்சி இடந்தரவில்லை என்று சென்ற வாரம் ஆசியான் உச்சநிலை மாநாட்டில் பங்கேற்ற இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
ஆனால், இந்தியாவைத் தவிர்த்துப் பார்த்தாலும் இது உலகின் மிகப் பெரிய ஒப்பந்தம் என்று செய்தித் தகவல்கள் கூறுகின்றன.
ஏனெனில், இதில் ஆசியானின் 10 உறுப்பு நாடுகளுடன் சீனா, ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கை ஒப்பந்த நாடுகள் கொண்டுள்ளதாகக் கூறப்
படுகிறது. நேற்றைய நிகழ்ச்சியில் அமெரிக்கா, சீனாவுக்கு இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள், எல்லை தாண்டிய தரவு பரிமாற்றம் தொடர்பான கேள்விகளுக்கும் திரு ஈஸ்வரன் பதிலளித்தார்.
அமெரிக்கா, சீனாவுக்கு இடையே எந்தவிதமான முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தமும் முக்கியமான ஒன்று என்று குறிப்பிட்ட திரு ஈஸ்வரன், அது ஆக்ககரமான ஒரு முதற்படியாகும் என்று விளக்கினார்.
"அது பிரச்சினைகளைக் களைய மேற்கொள்ளப்படும் உணர்வு, தீர்வுகளைக் கண்டறிவதற்கான கடப்பாட்டை பிரதிபலிக்கிறது," என்று தெரிவித்தார்.

