அதிபர் ஹலிமா யாக்கோப்பிற்கு ஆக உயரிய விருது வழங்கி கௌரவித்தார் சவூதி அரேபியா மன்னர்

அதிபர் ஹலிமா யாக்கோப்பிற்கு ஆக உயரிய விருது வழங்கி கௌரவித்தார் சவூதி அரேபியா மன்னர்

2 mins read
dc856882-fff4-49cd-87b1-be953ff5ac03
-

அதிபர் ஹலிமா யாக்கோப்புக்கு சவூதி அரேபியாவின் ஆக உயரிய விருதான அப்துல்லாஸிஸ் விருது அளிக்கப்பட்டது.

இந்த விருதை சவூதி மன்னர் சல்மான் பின் அப்துல்லாஸிஸ் அல் சவுத் நேற்று முன்தினம் ரியாத்தில் உள்ள அரண்மனையில் அளித்தார்.

சவூதி அரேபியாவின் இந்த உயரிய விருதைப் பெறும் முதல் சிங்கப்பூரர் என்ற பெருமையைப் பெறுகிறார் அதிபர் ஹலிமா யாக்கோப்.

சவூதி மன்னர் சல்மான் அவரது அல் எமமா அரண்மனையில் அதிபர் ஹலிமாவுக்கும் அவரது கணவருக்கும் விருந்தளித்துக் கௌரவித்தார்.

இரு நாட்டுத் தலைவர்களும் சிங்கப்பூருக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையேயுள்ள நீண்ட கால உறவை மறுஉறுதிப் படுத்தினர்.

மேலும் அந்தப் பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கும் இடையேயான கூட்டுறவை விரிவுபடுத்துவது குறித்துப் பேசப்பட்டது.

அடுத்த ஆண்டு ரியாத் நகரில் சவூதி அரேபியாவின் தலைமையில் நடைபெறவிருக்கும் ஜி20 மாநாட்டில் கலந்துகொள்ள சிங்கப்பூருக்கு மன்னர் சல்மான் விடுத்த அழைப்பை அதிபர் ஹலிமா ஏற்றுக்கொண்டார்.

செவ்வாய்க்கிழமை மாலை சவூதி அரேபியாவின் தலைநகரான மெதினாவுக்குச் சென்றார்.

அரச விமான நிலையத்தில் சிங்கப்பூர், சவூதி அரேபிய நாடுகளின் தேசிய பாடல்களை ராணுவ இசைக் கலைஞர்கள் ஒலிக்க அவரை ரியாத் ஆளுநரும் இளவரசருமான ஃபைசல் பின் பண்டார் வரவேற்றார். அவர்கள் இருவரும் ரியாத் நகரத்துக்கு உட்பட்ட பகுதியில் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விவாதித்ததுடன் அதனால் சிங்கப்பூர் நிறுவனங்களுக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் பற்றியும் பேசினர் என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ரியாத்தில் அதிபர் தேசிய அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டார். நேற்று பின்னேரத்தில் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானையும் அதிபர் சந்திப்பதாக இருந்தது. அதிபர் ஹலிமா நேற்று ஜெடா நகரம் சென்று சவூதி அரேபிய வர்த்தகக் குழுவையும் சந்தித்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சந்திப்புக்கு சிங்கப்பூர் வர்த்தக கூட்டமைப்பும் என்டர்பிரைஸ் சிங்கப்பூர் நிறுவனமும் ஏற்பாடு செய்திருந்தது. அதிபர் ஹலிமா, சவூதி அரேபியாவில் வாழும் சிங்கப்பூரர்களின் விருந்துபசரிப்பிலும் கலந்துகொண்டார்.