சிங்கப்பூருக்கும் புருணைக்கும் இடையே சிறக்கும் உறவு

சிங்கப்பூருக்கும் புருணைக்கும் இடையே சிறக்கும் உறவு

1 mins read
fe791593-31b6-43f1-83d9-6a76be79f198
தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் (இடது) புருணை மன்னர் ஹசனல் போல்கியாவை நேற்று சந்தித்தார். படம்: தற்காப்பு அமைச்சு -

சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென், அதிகாரபூர்வ வருகை மேற்கொண்டு புருணை சென்றுள்ளார். அங்கு அவர் புருணை மன்னர் ஹசனல் போல்கியாவைச் சந்தித்து இரு நாடுகளுக்கும் இடையே உள்ள நல்லுறவை மறுஉறுதிப்படுத்தினார். மேலும் இந்த இரு தலைவர்களும் சிங்கப்பூர் - புருணை நாடுகளுக்கு இடையேயான நல்லுறவின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினர். இந்த இரு நாடுகளும் இணைந்து நடத்தி வரும் 'எக்சர்சைஸ் பெலிகான்' என்னும் ராணுவப் பயிற்சி வெற்றிகரமாக 40 ஆண்டுகள் நிறைவுபெறுவதை வரவேற்றனர்.

இந்தப் பயணத்தின்போது அமைச்சர் இங், புருணையின் பட்டத்து இளவரசரான ஹாஜி அல்-முஹ்தாதி பில்லா மற்றும் பிரதமர் அலுவலக அமைச்சர் திரு ஹாஜி அவாங் அப்துல் மோக்தி ஹாஜி முகமது தாவுத் ஆகியோரை சந்தித்தார்.

பட்டத்து இளவரசரிடம் டாக்டர் இங் வட்டாரப் பாதுகாப்புக் குறித்துப் பேசியதோடு நீண்டகால தற்காப்பு ஒத்துழைப்பையும் மறுஉறுதிப்படுத்தியதாக தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.

நேற்று, டாக்டர் இங், புருணையின் தற்காப்பு அமைச்சர் ஹாஜி முகமது யூசோப்பை சந்தித்தார். அவர்கள் இருவரும் 1979ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கூட்டு கடற்படைப் பயிற்சியான பெலிகான் பயிற்சியைப் பார்வையிட்டனர். ஆறு கப்பல்களுடன் புருணை கடல் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி இன்று வரை இந்தப் பயிற்சி நடைபெறுகிறது.