வாடிக்கையாளர்கள் பொதுப் போக்குவரத்தில் இம்மாதம் 16ஆம் தேதி சனிக்கிழமை முதல் நெட்ஸ் வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பயணம் செய்யலாம்.
நிலப் போக்குவரத்து ஆணையம் இவ்வாறு அறிவித்தது. நெட்ஸ் புழங்கிகள், தங்களுடைய நெட்ஸ் அட்டைகளைப் பயன்படுத்தி டிரான்சிட்லிங்க் நிறுவனத்தின் சிம்ப்ளிகோ கணக்குடன் தொடர்புகொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அவர்கள் தங்களுடைய பயணத் தகவல்களைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம். பயணம் செய்யும்போதே கட்டணம் பற்றிய விவரங்களையும் அவர்கள் பெறலாம். சிம்ப்ளிகோ கணக்கில் கடந்த ஏப்ரல் முதல் 250,000 பேருக்கும் அதிக மக்கள் சேர்ந்து இருக்கிறார்கள் என்று இந்த ஆணையம் தெரிவித்து உள்ளது.
நெட்ஸ் பயனீட்டிற்கு வருவதற்கு முன்பாகவே மாஸ்டர்கார்டு, விசா பயனீட்டாளர்கள் ஏற்கெனவே பேருந்து மற்றும் ரயிலில் தங்கள் அட்டைகளைக் கொண்டு அல்லது கைபேசிகளைக் கொண்டு பயணம் செய்து வருகிறார்கள்.
நெட்ஸ் பயனீட்டாளர்களுக்கு மேலும் வசதியை ஏற்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை இடம்பெறுவதாக நெட்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஜாஃப்ரி கோ தெரிவித்தார்.
இதனிடையே, சிம்ப்ளிகோ கணக்கு விரைவில் மேலும் விரிவு படுத்தப்படும் என்று ஆணையம் தெரிவித்து உள்ளது.
சிம்ப்ளிகோ நன்மைகளை ஈஸி-லிங்க் பயனீட்டாளர்களும் அனுபவிக்கும் வகையில் இந்த ஆணையம் இப்போது முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
சிம்ப்ளிகோ கணக்கில் சேர வேண்டுமானால் simplygo.com.sg என்ற களஞ்சியத்தைப் பயனீட்டாளர்கள் பயன்படுத்தலாம். அல்லது சிம்ப்ளிகோ கைபேசிச் செயலியைப் பதிவிறக்கம் செய்யலாம்.

