போதைப்பொருள் ஒழிப்பில் உத்திபூர்வ முயற்சி தேவை

போதைப்பொருள் ஒழிப்பில் உத்திபூர்வ முயற்சி தேவை

2 mins read
b7a58499-a709-473c-abbd-8a5ef264964a
போதைப்பொருள் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு எதிரான ஆசிய பசிபிக் கருத்தரங்கம் அமைப்பின் கூட்டத்தில் உரையாற்றிய மனிதவள அமைச்சர் திருவாட்டி ஜோசபின் டியோ. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

போதைப்பொருளுக்கு எதிரான போராட்டமும் கஞ்சா பற்றிய தவறான தகவல்கள் பரவுவதைத் தடுப்பதும் இன்றைய நிலையில் இடம்பெறவேண்டிய மிக முக்கியமான நடவடிக்கைகள் என்று மனிதவள அமைச்சர் திருவாட்டி ஜோசபின் டியோ வலியுறுத்திக் கூறி இருக்கிறார்.

போதைப்பொருள் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு எதிரான ஆசிய பசிபிக் கருத்தரங்கம் அமைப்பின் கூட்டத்தில் பேசிய அவர், கஞ்சாவைச் சட்டபூர்வமானதாக ஆக்க வேண்டும் என்று வெளிநாடுகளில் இடம்பெற்று வரும் முயற்சிகளுக்கும் கஞ்சா பற்றி பரப்பப்படும் தவறான தகவல்களுக்கும் பெரிய நிறுவனங்களே காரணம் என்று தெரிவித்தார்.

அந்த நிறுவனங்கள் தங்களுடைய இலக்குகளை நிறைவேற்ற பெரும் பணத்தைச் செலவிடுவதாகவும் அவர் கூறினார். இதில் அவை வெற்றி பெற்றால் போதைப்பொருள் சூழ்நிலை இன்னும் மோசமாகிவிடும் என்று அவர் எச்சரித்தார்.

போதைப் புழக்கத்துக்கு எதிரான தேசிய மன்றமும் போதைப்பொருள் தடுப்பு தேசிய மன்றமும் ஏற்பாடு செய்த அந்தக் கருத்தரங்கில் உரையாற்றிய இரண்டாவது உள்துறை அமைச்சருமான திருவாட்டி டியோ, ஏற்கெனவே 12 மில்லியன் இளைஞர்கள் கஞ்சாவைத் தவறாகப் பயன்படுத்தியதாக 2018ல் தெரிவிக்கப்பட்டதைச் சுட்டினார்.

இந்த எண்ணிக்கை இளம் அமெரிக்கர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமாகும்.

சட்ட அமலாக்கத் துறை, அரசு சாரா அமைப்புகள், போதைப்பொருளுக்கு எதிரான தொண்டர்கள் ஆகியோருக்கு இளைஞர்கள் போதைப்பொருளில் சிக்குவதே பெரும் கவலையாக இருக்கிறது.

உள்துறை அமைச்சு 2018ல் ஓர் ஆய்வு நடத்தியது. அதில் கலந்துகொண்ட 13 முதல் 30 வரை வயதுள்ளவர்கள் பொதுவாக கஞ்சா பற்றி மிதமான கண்ணோட்டத்து டன் உள்ளனர் என்பது தெரிந்தது.

சிங்கப்பூரில் கஞ்சாவைத் தவறாகப் பயன்படுத்துவது தொடர்ந்து சட்டவிரோதமானதாகவே இருந்து வரவேண்டும் என்று 30 வயதுக்கும் மேற்பட்டவர்களில் 90 விழுக்காட்டினர் கருதுகிறார்கள்.

இப்படி கருதும் இளைஞர்களின் அளவு சுமார் 80 விழுக்காடாக உள்ளது.

அந்த மாநாட்டில் உரையாற்றிய 'நியூசிலாந்தில் குடும்பத்திற்கே முன்னுரிமை' என்ற ஓர் அமைப்பின் இயக்குநரான பாப் மெக்கோஸ்ரி, இளையர்களைக் கஞ்சாவுக்கு அடிமையாக்கிவிட்டால் தங்களுக்கு ஆயுள் முழுவதும் வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள் என்பது பெரும் நிறுவனங்களுக்குத் தெரியும் என்றார்.

போதைப் புழக்கத்துக்கு எதிரான தேசிய மன்றத்தின் துணைத் தலைவரான சியூ துவான் சியோங், அரசாங்கம், அரசு சாரா அமைப்புகள், சமூகம் மூன்றுக்கும் இடைப்பட்ட முத்தரப்பு முயற்சியே சிங்கப்பூரின் பாணி என்றும் இந்தப் பாணி பலன் தரும் என்பது மெய்ப்பிக்கப்பட்டு இருப்ப தாகவும் தெரிவித்தார்.