'ஜிஇ' $82 மில்லியன் முதலீடு

'ஜிஇ' $82 மில்லியன் முதலீடு

2 mins read
0de6c616-f38e-4247-a8e5-ebd9d0fd7290
சிங்கப்பூரில் மின் உற்பத்தி எரிவாயு இயந்திரத்தைப் பழுதுபார்ப்பதற்கான ஆற்றல்களை மேம்படுத்தும்  வகையில் அமெரிக்காவின் ஜெனரல் எல்க்ட்ரிக் (GE) நிறுவனம் S$81.6 மில்லியன் (US$60 மில்லியன்) முதலீடு செய்கிறது. படம்: ஜிஇ -

உலகளவில் பிரபலமான அமெரிக்காவின் ஜெனரல் எல்க்ட்ரிக் (GE) நிறுவனம், சிங்கப்பூரில் தன்னுடைய மின் உற்பத்தி எரிவாயு இயந்திரத்தைப் பழுதுபார்ப்பதற்கான ஆற்றல்களை மேம்படுத்தும் வகையில் S$81.6 மில்லியன் (US$60 மில்லியன்) முதலீடு செய்கிறது.

இந்த முதலீடு அடுத்த 10 ஆண்டு காலத்தில் இடம்பெறும் என்றும் இதன் காரணமாக அதிநவீன தயாரிப்புத் துறையில் 160 வேலைகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜிஇ நிறுவனத்தின் இப்போதைய பழுதுபார்ப்பு நிலையத்தில் சுமார் 250 பேர் வேலை பார்க்கிறார்கள். சிங்கப்பூரில் இந்த நிறுவனம் மொத்தம் 4,000 பேருக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குகிறது.

அதிக ஆற்றலைக் கொண்ட, காற்று மூலம் குளிரூட்டும் வசதியுடன் கூடிய மின் உற்பத்தி எரிவாயு இயந்திரங்களைப் பழுதுபார்ப்பதற்காக புதிதாக அமைக்கப்படும் நிலையம் அமெரிக்காவுக்கு வெளியே இந்த நிறுவனம் அமைக்கும் இத்தகைய முதல் நிலையம்.

இது 2021 முதல் பாதியில் செயல்படத் தொடங்கும் என்று இந்த நிறுவனம் நேற்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. இன்றைய தேதியில் 18 நாடுகளில் இருந்து இந்த நிறுவனத்திற்கு இத்தகைய மின் உற்பத்தி இயந்திரம் தொடர்பில் 100க்கும் மேற்பட்ட தருவிப்பு ஆணைகள் வந்திருக்கின்றன.

புதிய பழுதுபார்ப்பு நிலையம் 398,000 சதுர அடிக்கும் மேற்பட்ட பரப்புள்ள இடத்தில் அமைக்கப்படும். உலகளவில் இந்த நிறுவனத்தின் ஆகப் பெரிய பழுதுபார்ப்பு நிலையமாக அது திகழும்.

இத்தகைய நிலையத்தைச் சிங்கப்பூரில் அமைக்க உகந்த சூழ்நிலை இங்கு இருப்பதாக ஜிஇ ஆசிய பசிபிக் பிரிவின் தலைவரும் தலைமை நிர்வாகியுமான ஊட்டர் வான் தெரிவித்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.

சிங்கப்பூரில் 1969ல் உற்பத்தித் துறை நடவடிக்கைகளைத் தொடங்கிய ஜிஇ நிறுவனம் மின் உற்பத்தி, மின் விநியோகம், விமானப் போக்குவரத்து, சுகாதாரப் பராமரிப்பு ஆகிய துறைகளில் இப்போது ஒருமித்த கவனம் செலுத்தி வருகிறது.