வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் மறுவிற்பனை வீடுகள் சென்ற மாதத்தில் அதிகமாகக் கைமாறின. முதல் தடவை மறுவிற்பனை வீடுகளை வாங்குவோருக்குச் செப்டம்பர் முதல் அதிக மானியம் வழங்கப்படுகிறது.
அவர்களின் வருமான வரம்பும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இவற்றின் விளைவாக செப்டம்பருடன் ஒப்பிடுகையில் அக்டோபரில் 18 விழுக்காடு அதிகமாக அதாவது 2,213 வீடுகள் கைமாறி உள்ளன.
நிலச் சொத்து களஞ்சியமான எஸ்ஆர்எக்ஸ் பிராப்பர்டி நிறுவனம் நேற்று இந்த விவரங்களைத் தெரிவித்தது.
ஓராண்டுக்கு முந்தைய நிலவரத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் மறுவிற்பனையான வீடுகளின் எண்ணிக்கை 10.6 விழுக்காடு அதிகம்.
சென்ற மாதத்தில் கைமாறிய மறுவிற்பனை வீடுகளில் 40.8 விழுக்காடு நான்கறை வீடுகள். ஐந்தறை வீடுகளின் அளவு 24.3 விழுக்காடு. மூவறை வீடுகள் 25.4 விழுக்காடு. எக்ஸிகியூட்டிவ் அடுக்குமாடி வீடுகளின் அளவு 7.5 விழுக்காடாக இருந்தது.
கைமாறிய இதர வீடுகள் பல தலைமுறை மற்றும் ஈரறை வீடுகள் ஆகும். அண்மையில் நடப்புக்கு வந்த கொள்கை மாற்றங்களால் மறுவிற்பனை சந்தையில் தாக்கம் ஏற்பட்டு இருக்கலாம் என்று பகுப்பாய்வாளர்கள் கூறுகிறார்கள்.
முதல் தடவையாக வீட்டை வாங்குவோருக்கு, அவர்கள் புதிய வீட்டை அல்லது மறுவிற்பனை வீட்டை வாங்கும்போது $80,000 வரை மானியம் கிடைக்கும் என்று அரசாங்கம் செப்டம்பரில் அறிவித்தது. அதோடு குடும்பங்களுக்கான வருமான உச்ச வரம்பும் உயர்ந்தது.
இதனிடையே, செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் சென்ற மாதத்தில் மறுவிற்பனை வீட்டு விலை 0.2 விழுக்காடு குறைந்தது.சென்ற ஆண்டு அக்டோபருடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் விலைகள் 0.1 விழுக்காடு அதிகம்.
பினாக்கிள்@டக்ஸ்டன்னில் உள்ள ஓர் ஐந்தறை வீடுதான் ஆக அதிகத் தொகைக்கு அதாவது $1.1 மில்லியன் விலைக்குக் கைமாறிய மறுவிற்பனை வீடாக இருந்தது.
ஹவ்காங்கில் எக்ஸிகியூட்டிவ் மாடி வீடு $850,000 கொடுத்து வாங்கப்பட்டது. முதிர்ச்சி அடையாத பேட்டையில் இந்த விலைக்கு விற்கப்பட்ட வீடு இதுதான்.
இதனிடையே, அடுத்த மூன்று மாதங்களில் 2,320 வீடுகள் மறுவிற்பனைச் சந்தைக்கு வரும் என்று எஸ்ஆர்எக்ஸ் முன்னுரைத்துள்ளது.

