58 மணி நேரத்திற்குப் பிறகு பிடிபட்ட ஆடவர்

கடந்த புதன்கிழமை நிலப் போக்குவரத்து ஆணைய அதிகாரியிடம் இருந்து தப்ப முயன்றபோது தமது ‘பிஎம்டபிள்யூ’ கார் மூலம் அடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்திவிட்டு தலைமறைவான ஆடவர் 58 மணி நேரத்திற்குப் பிறகு கைது செய்யப்பட்டார்.

அந்த ஆடவர் பொய்யான உரிமத் தகட்டைக் காட்சிக்கு வைத்திருக்கக்கூடும் என நிலப் போக்குவரத்து ஆணைய அதிகாரிக்குச் சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, அவரிடம் இருந்து தப்ப முயன்ற அந்த ஆடவரின் கார் முதலில் பெண்டமியர் சாலையை நோக்கிச் செல்லும் கேலாங் பாரு சாலையில் ஒரு டாக்சி மீது இடித்தது; பின்னர் புளோக் 22 செயின்ட் ஜார்ஜஸ் சாலையில் நிறுத்தப்பட்டு இருந்த இன்னொரு கார் மீது மோதியது.

தமது வெள்ளை நிற ‘பிஎம்டபிள்யூ’ காரில் இருந்து அந்த ஆடவர்  வெளியேற முற்படுவதையும் அப்போது அந்த கார், நிறுத்தப்பட்டிருந்த கறுப்பு நிற கார் மீது மோதுவதையும் ‘யூடியூப்’ சமூக ஊடகத்தில் பகிரப்பட்ட ஒரு காணொளி காட்டியது.

இந்த இரு சம்பவங்களையும் ‘விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடியதாக’ போலிஸ் வகைப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் அந்த ஆடவர் பிடிபட்டதாக அறியப்படுகிறது. அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கைது முயற்சியின்போது போலிசாருக்கு ஒத்துழைக்க மறுத்ததால் அவருக்குக் காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்றும் சொல்லப் படுகிறது.

2017-2018 ஆண்டுகளுக்கு இடையே பொய்யான பதிவெண் தகடுகளை வைத்திருந்ததாக அறுவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதாகவும் அவர்களுள் மூவருக்குச் சிறைத் தண்டனையும் இதர மூவருக்கு அபராதமும் விதிக்கப்பட்டன என்றும் போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் நாடாளுமன்றத்தில் கடந்த ஜூலை மாதம் தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

போலியான பதிவெண் தகட்டைப் பொருத்திய குற்றம் நிரூபிக்கப்பட்டால் $5,000 வரை அபராதம், ஓராண்டு வரை சிறை அல்லது இவ்விரு தண்டனைகளும் விதிக்கப்படலாம்.