ஜூரோங் - கிளமெண்டி நகர மன்றத்திற்கு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை எச்சரிக்கை

கடந்த வாரம் புக்கிட் பாத்தோக்கில் உள்ள ஒரு குடியிருப்பில் தீ விபத்து நிகழ்ந்த நிலையில், அங்கிருந்த தீயணைப்பு ரப்பர் குழாயைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதற்காக ஜூரோங் - கிளமெண்டி நகர மன்றத்தை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை எச்சரித்துள்ளது.

புக்கிட் பாத்தோக் ஸ்திரீட் 21, புளோக் 210Aயின் 13வது தளத்தில் உள்ள ஒரு வீட்டில் இம்மாதம் 1ஆம் தேதி அதிகாலை 4.30 மணியளவில் தீப்பிடித்தது. தீப்புண், புகையால் ஏற்பட்ட மூச்சுப் பிரச்சினை ஆகிய காரணங்களுக்காக அவ்வீட்டில் இருந்த மூவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், அந்த புளோக்கில் தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கும் ரப்பர் குழாய்கள் இருந்த சில அலமாரிகளுக்குப் பூட்டுப் போடப்பட்டிருந்ததால் அவசரகால வாகனங்களில் இருந்த தண்ணீரைக் கொண்டு தீயை அணைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டதாக குடிமைத் தற்காப்புப் படை அறிக்கை மூலம் தெரிவித்தது.

அத்தகைய அலமாரிகளில் ஒன்றின் பூட்டை உடைத்தபோதும் உள்ளே இருந்த ரப்பர் குழாய்க்குத் தண்ணீர் விநியோகம் இல்லை என்பது தெரியவந்தது.

தங்களது பேட்டைகளின் தீப்பாதுகாப்பு அம்சங்களை முறையாகப் பராமரிக்க வேண்டியதும் அவை முறையாகச் செயல்படுகின்றனவா என்பதை உறுதிப்படுத்த வேண்டியதும் நகர மன்றங்களின் பொறுப்பு என்று குடிமைத் தற்காப்புப் படை அறிவுறுத்தியுள்ளது.

பிறகு அன்றைய நாளே, நகர மன்றப் பிரதிநிதிகளுடன் சேர்ந்து அந்த தீயணைப்பு ரப்பர் குழாய்களைக் குடிமைத் தற்காப்புப் படை சோதித்துப் பார்த்தது. 

அதைத் தொடர்ந்து, தீப்பாதுகாப்பு விதிகளுக்கு இணங்காததற்காக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக் கட்டமைப்பின்கீழ் தீ அபாயக் குறைப்பு அறிவுறுத்தல் கடிதங்கள் வழங்கப்பட்டன.

விதிகளுக்கு இணங்கும் வகையில் குறைகளை, பழுதுகளை நகர மன்றம் சரிசெய்ய வேண்டும் என்பதை அக்கடிதங்கள் அறிவுறுத்துகின்றன. அடுத்த முறை ஆய்வுக்குச் செல்லும்போது எந்த அம்சமேனும் இதேபோன்று விதிகளுக்கு இணங்காதிருப்பதாகக் குடிமைத் தற்காப்புப் படை கண்டறிந்தால் அந்த நகர மன்றத்திற்கு $5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் அல்லது அதன்மீது வழக்குத் தொடரப்படலாம்.