குற்றத் தடுப்பு தூதர்களான இல்லப் பணிப்பெண்கள்

நாட்டின் பாதுகாப்பில் தங்களுக்கும் பங்குண்டு என்பதைக் காட்ட நேற்று கிட்டத்தட்ட 320 வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்கள் களத்தில் இறங்கினர். பாய லேபாரில் உள்ள வாழ்நாள் கல்விக் கழகத்தில் நடைபெற்ற பயிலரங்கில் பங்கேற்ற பணிப்பெண்கள், நாட்டில் குற்றச்செயல்கள் நிகழாமல் தடுப்பதைப் பற்றி தெரிந்துகொண்டனர். பிடோக் போலிஸ் பிரிவு ஏற்பாடு செய்த பயிலரங்கில் மோசடி, அனுமதியின்றி அத்துமீறி வீட்டுக்குள் நுழைதல் போன்றவற்றைப் பற்றி அறிந்துகொண்டனர். அத்துடன் உரிமம் இன்றி கடன் தருவோருக்கு எதிராகத் தங்களைப் பாதுகாத்துக்கொள்வது பற்றியும் கடன்முதலைகளால் ஏற்படும் பிரச்சினைகள் பற்றியும் தகவல்கள் பகிரப்பட்டன.

இத்தகைய பயிலரங்குகளில் பங்கேற்போரின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருவதாகவும் இதனால் குற்றத் தடுப்பு விழிப்புணர்வு அதிக அளவில் பரவியுள்ளதாகவும் பயிலரங்கை நடத்திய போலிஸ் அதிகாரி கஃப்பாரி நசருதீன் கூறினார். வந்திருந்த பணிப்பெண்களில் பலர் குற்றத் தடுப்பு தொடர்பில் தூதர்களாகத் தொண்டூழியம் செய்ய முன்வந்ததுடன் காணொளிகளில் தோன்றிக் குறிப்புகளைப் பகிர்ந்துகொள்ளவும் விருப்பம் தெரிவித்தது இதுபோன்ற பயிலரங்குகளுக்குக் கிடைத்த வெற்றிக்குச் சான்று.