மூதாட்டியின் மரணத்தை விளைவித்ததன் பேரில் குற்றம் சாட்டப்பட்ட மின்-ஸ்கூட்டர் ஓட்டுநர்

மூதாட்டியின் மரணத்தை விளைவித்ததன் பேரில் குற்றம் சாட்டப்பட்ட மின்-ஸ்கூட்டர் ஓட்டுநர்

1 mins read
f569997b-6e84-4265-8d3c-13d90b0c039c
-

பிடோக் நார்த் வட்டாரத்தில் செப்டம்பர் மாதம் சைக்கிளோட்டி மரணமடைந்ததன் தொடர்பில் மின்-ஸ்கூட்டர் ஓட்டுநர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார். தனது செயலால் 60 வயது ஓங் பீ எங்கின் மரணத்தை முன்யோசனையின்றி விளைவித்ததன் பேரில் 20 வயது மலேசியர் ஹங் கீ பூன் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

சிங்கப்பூர் நிரந்தரவாசியான அவர், உந்து நடமாட்டச் சட்டத்தின்கீழ் (Active Mobility Act) குற்றம் சாட்டப்பட்டார். பிடோக் நார்த் ஸ்திரீட் 3ல் புளோக் 539க்கு அருகிலுள்ள சைக்கிள் பாதையில் ஹங் மணிக்கு 26 கிலோமீட்டர் முதல் 28 கிலோமீட்டர் வரையிலான வேகத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது சாய் சீ ஸ்திரீட்டிலுள்ள தனது வீட்டுக்கு சைக்கிளில் சென்றுகொண்டிருந்த திருவாட்டி ஓங் மீது ஹங் மோதினார்.

எந்தச் சூழலிலும் தனிநபர் நடமாட்டச் சாதனங்களின் வேகம் மணிக்கு 25 கிலோமீட்டரைத் தாண்டுவது சட்டப்படி குற்றம். மேலும் ஹங் ஓட்டிக்கொண்டிருந்த சாதனம் பதிவுசெய்யப்படவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

விலா, கழுத்து எலும்புகளில் முறிவுகள் ஏற்பட்டதுடன் மூளையில் பலமாகக் காயமடைந்த திருவாட்டி ஓங், சுயநினைவின்றி சாங்கி பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு கோமா ஏற்பட்டு நான்கு நாட்களுக்குப் பிறகு இறந்தார். தனக்காக வாதாட வழக்கறிஞர் இன்றி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட ஹங்கிற்கு 15,000 வெள்ளி பிணை வழங்கப்பட்டுள்ளது. இம்மாதம் 25ஆம் தேதி அவர் நீதிமன்றத்திற்குத் திரும்ப வேண்டும்.

முன்யோசனையின்றி மரணம் விளைவித்த குற்றத்திற்காக ஹங்கிற்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனையுடன் அபராதம் விதிக்கப்படலாம்.