சுடச் சுடச் செய்திகள்

பயணப் பெட்டிகளின் ஒட்டுவில்லைகளை மாற்றிய ஆடவருக்கு 20 நாள் சிறை

விமானங்களில் ஏற்றிவிடப்பட இருந்த பயணப் பெட்டிகளுக்கான ஒட்டுவில்லைகளை வேண்டுமென்றே மாற்றி ஒட்டிய விமான நிலைய ஊழியருக்கு 20 நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. டே பூன் கேவின் இந்தச் செயலால் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், சில்க் ஏர் விமானப் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

தம்மீது சுமத்தப்பட்ட குற்றத்தை டே ஒப்புக்கொண்டார். வேலையில் அதிருப்தி கொண்டதால் ஒட்டுவில்லைகளை மாற்றி ஒட்டி  குழப்பம் விளைவித்ததாக தெரிவிக்கப்பட்டது. 

மொத்தம் 286 ஒட்டுவில்லைகளை அவர் இடம் மாற்றினார். அதன் காரணமாக பாதிக்கப்பட்ட இரண்டு விமானச் சேவைகளும் பாதிக்கப்பட்ட 221 பயணிகளுக்கு $42,000க்கும் அதிகமான இழப்பீடு வழங்கும் நிலை ஏற்பட்டது.

இந்தக் குற்றத்தை 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கும் 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில் டே புரிந்தார். குற்றங்களைப் புரிந்தபோது அவர் மிக மோசமான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. 

ஆனால் டேவுக்கு ஏற்பட்ட மன அழுத்தம் குற்றங்களுக்குக் காரணமாக இருக்கவில்லை என்று நீதிபதி தீர்ப்பளித்தார். 

2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் சுலபமான வேலைக்கு மாற்றப்பட்டதும் பயணப் பெட்டிகளின் ஒட்டுவில்லைகளை மாற்றுவதை டே நிறுத்திக்கொண்டதை நீதிபதி சுட்டினார். டே செய்தது சாதாரண குற்றம் இல்லை என்றும் பாதிக்கப்பட்ட விமானச் சேவைகளுக்கு அது இழப்பை ஏற்படுத்தியதாகவும் நீதிபதி கூறினார். அதுமட்டுமல்லாது, டேயின் செயல் அந்த விமானச் சேவைகளின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்தாகவும் அவர் தெரிவித்தார்.

தமக்குக் கொடுக்கப்பட்ட வேலை மிகவும் கடினமாக இருப்பதாகவும் அதனால் சோர்வடைவதாகவும் தமது மேற்பார்வையாளரிடம் டே முறையிட்டுள்ளார். ஆனால் ஆள் பற்றாக்குறை காரணமாக டேக்கு உதவியாக இன்னோர் ஊழியரை நிறுவனம் நியமிக்கவில்லை.  

விரக்தி அடைந்த டே பயணப் பெட்டிகளில் ஒட்டுவில்லைகளை மாற்றி ஒட்டினார்.  கண்காணிப்பு கேமரா இல்லாத இடத்தில் அவர் இந்தக் குற்றத்தைப் புரிந்தார்.

தங்கள் பயணிகளின் பெட்டிகளில் உள்ள ஒட்டுவில்லைகளை யாரோ மாற்றிவிட்டதாக சிங்கப்பூர் ஏர்லைன்சும் சில்க் ஏர் விமானச்  சேவையும் புகார் செய்த பிறகு டேயின் செயல்கள் வெளிச்சத்துக்கு வந்தன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon