குடிபோதையில் வாக்குவாதம்: பாடகர் அலிஃப் அசிஸ் கைது

ஆர்ச்சர்ட் சாலையில் நேற்று முன்தினம் காலை குடிபோதையில் வாக்குவாதம் செய்துகொண்டிருந்த உள்ளூர் பாடகர் அலிஃப் அசிஸ் கைது செய்யப்பட்டார்.

ஆர்ச்சர்ட் டவர்ஸ் அருகில் அலிஃபை போலிஸ் அதிகாரிகள் இருவர் மடக்கிப் பிடித்து கைது செய்வதைக் காட்டும் காணொளி சமூக ஊடகத்தில் வலம் வந்தது.

போலிஸ் அதிகாரிகள் அவரைக் கைது செய்ய முயன்றபோது தமது கைபேசியில் அவர் தமது தந்தையிடம் உதவி கேட்டு அலறுவதைக் காணொளி காட்டியது.

நேற்று முன்தினம் காலை 6.40 மணி அளவில் ஆர்ச்சர்ட் சாலையில் போலிசார் சுற்றுக்காவல் மேற்கொண்டபோது இருவர் வாக்குவாதம் செய்துகொண்டிருந்தைப் பார்த்ததாக போலிஸ் படை அறிக்கை வெளியிட்டது.

பலமுறை எச்சரித்தும், குடிபோதையில் இருந்த 28 வயது அலிஃப் தொடர்ந்து கோபத்தை வெளிப்படுத்தியதாக போலிசார் தெரிவித்தனர்.

குடிபோதையில் பொதுமக்களுக்கு தொந்தரவு விளைவித்த குற்றத்துக்காக அவர் கைது செய்யப்பட்டார்.

போலிசார் அவரைக் கைது செய்ய முயன்றபோது அவர்களை எதிர்த்து அவர் கடுமையாகப் போராடியதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்து போலிசார் விசாரணை நடத்துகின்றனர்.

அலிஃபின் தாயார் எஸ்.ஹஃபிசா பாலாராஹியை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர்கள் தொடர்புகொண்டபோது தமது மகன் கைது செய்யப்பட்டது பற்றி கருத்து தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.

அலிஃப் தமது மகன், குடும்பத்தாருடன் வீட்டில் நன்றாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இந்தோனீசிய நடிகை ஒருவரிடமிருந்து பணம் திருடியதாகவும் ஸ்டார்பக்ஸ் உணவகத்தில் இருந்தபோது சிகரெட் மற்றும் லைட்டரைத் திருடியதாகவும் அலிஃப் மீது கடந்த மாதம் குற்றம் சுமத்தப்பட்டது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவருக்கும் அவரது மனைவியான மலேசிய நடிகை பெல்லா அஸ்டில்லாவுக்கும் இடையே மணமுறிவு ஏற்பட்து.

அலிஃபுக்கு மூன்று வயதில் மகன் இருக்கிறான்.