உள்ளாட்சித் தேர்தல்: ரகசிய பேச்சில் அரசியல் கட்சிகள்

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்ததாக உள்ளாட்சித் தேர்தல் பரபரப்பு தலைதூக்கிவிட்டது. அடுத்த மாதத்திற்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடித்துவிட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.  இந்த நிலையில், ஆளும் அதிமுகவும் முக்கிய எதிர்க்கட்சியான திமுகவும் தங்களுடைய நேசக் கட்சிகளுடன் ரகசியமாக பேசத் தொடங்கி இருக்கின்றன என்று தகவல்கள் கசிந்துள்ளன. 

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இம்மாதம் 14 முதல் 20ஆம் தேதி வரை விருப்ப மனுக்களைப் பெறலாம் என்று திமுக நேற்று அறிவித்தது.  அதேவேளையில், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இம்மாதம் 15 மற்றும் 16ஆம் தேதிகளில் விருப்ப மனு அளிக்கலாம் என்று அதிமுக அறிவித்துள்ளது. 

இதற்காக அதிமுக மாவட்ட வாரியமாக குழுக்களையும் அமைத்து இருக்கிறது. இப்போதைய நிலவரப்படி அதிமுக அணியில் பாஜக, பாமக, தேமுதிக, புதிய நீதிக் கட்சி ஆகியவை இருக்கின்றன. அதேபோல திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள் ஆகியவை இருக்கின்றன. இந்த இரண்டு கட்சிகளும் தங்களுடைய கூட்டணி கட்சிகளுடன் ரகசியமாகப் பேச்சு வார்த்தைகளைத் தொடங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. 

இதற்காக பல அமைச்சர்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நியமித்து இருப்பதாகத் தெரிகிறது. அதேபோல திமுகவும் மூத்த நிர்வாகிகளைக் களமிறக்கி இருக்கிறது.

தமிழ்நாட்டில் 2016க்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடக்க வில்லை. மாநிலத்தில் அண்மையில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றியைச் சாதித்தது. ஆனால் விக்கிரவாண்டி, நாங்குநேரி இரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் ஆளும்கட்சி அமோக வெற்றி பெற்றது. 

இந்தச் சூழலில் இரு தரப்புகளுமே உள்ளாட்சித் தேர்தலை எதிர்பார்த்து இருப்பதாகத் தெரிகிறது. உள்ளாட்சித் தேர்தல் பற்றிய அறிவிப்பு இந்த மாதத்திற்குள் நிச்சயம் வெளியாகிவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே மேயர் பதவியே முக்கிய பேச்சாக இருக்கும் என்று பலரும் கணிக்கிறார்கள்.  உள்ளாட்சித் தேர்தல் வெற்றி 2021ல் நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் வாய்ப்பும் உண்டு.