புதுமையான கற்றல் முறையாக பூங்காக்களை மாணவர்கள் நிர்வகிப்பது நடைபெற்று வருகிறது.
'ஸ்டூடண்ட்-ரன் பார்க்' என்னும் முன்னோடி நடவடிக்கை ஜூலை மாதம் தொடங்கியது.
தேசிய பூங்காக் கழகத்துக்கும் தொழிற்கல்வி கழகத்துக்கும் இடையிலான ஒத்துழைப்பில் உருவானது இத்திட்டம்.
தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் நிலவனப்பு நிர்வாகம் மற்றும் வடிவமைப்புப் பாடத்திட்டத்தின் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 12 ஹெக்டர் பரப்பளவு உள்ள பூங்காவின் கிட்டத்தட்ட பாதி அளவை நிர்வகிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தேசிய பூங்காக் கழகத்தின் வழிகாட்டுதலுக்கு இணங்க சுமார் 40 மாணவர்கள் களத்தில் இறங்கினர்.
பிடோக் டவுன் பூங்காவில் பல்வேறு புதுமைகளை மாணவர்கள் ஏற்படுத்தினர். நோய்களைக் குணப்படுத்தும் தன்மை கொண்ட செடிகளால் ஒரு பூங்காவை வடிவமைத்தனர். அறுவடை செய்யும் பணிகளில் இயந்திர மனிதர்களை ஈடுபடுத்தினர்.
மேலும், மரங்களை சோதனையிட தொலைநோக்கி கேமராவும் ஆளில்லா வானூர்தியும் பயன்
படுத்தப்பட்டன. கழிவுகளை உரமாக மாற்றும் பகுதியையும் மாணவர்கள் ஏற்படுத்தினர்.
மரம் ஏறுதல் பயிற்சி உள்ளிட்ட வகுப்பில் பயின்ற அம்சங்களை நேரில் நல்ல முறையில் பயன்படுத்தியதாக ஜேஸ்பர் சான் என்னும் மாணவர் 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தித்தாளிடம் கூறினார்.
நிகழ்ச்சிக்கு வந்திருந்த சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சரும் தேசிய வளர்ச்சி இரண்டாம் அமைச்சருமான டெஸ்மண்ட் லீக்கு பூங்காவை மாணவர்கள் சுற்றிக் காண்பித்தனர். தங்களது பணி குறித்து அவரிடம் விளக்கிய மாணவர்கள் தாங்கள் கற்றுக்கொண்ட நில நிர்வாகத் திறன்களையும் எடுத்துரைத்தனர்.
முன்னோடித் திட்டம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு கிளமெண்டி உட்ஸ் பூங்காவுக்கும் இது விரிவுபடுத்தப்படும் என கழகம் நேற்று அறிவித்தது. இதற்காக கழகத்துடன் நீ ஆன் பலதுறைத் தொழில்நுட்பக் கல்லூரி ஒத்துழைக்கும்.
நிலவனப்புத் துறை உருமாற்றம் என்னும் பத்தாண்டு திட்டத்தின் ஒரு பகுதியாக பசுமை பற்றிய விழிப்புணர்வை இளையர்களிடம் விதைக்க 'ஸ்டூடண்ட்-ரன் பார்க்' நடவடிக்கை கடந்த மே மாதம் அறிவிக்கப்பட்டது.

