பொது இடத்தில் சாமான்களை வீசியவருக்கு $9,000 அபராதம்

பொது இடத்தில் சாமான்களை வீசியவருக்கு $9,000 அபராதம்

1 mins read
64c35155-eb92-4230-97fc-c93b31a9ab25
ஜூரோங்கில் உள்ள ஜாலான் டெருசனில் வீசப்பட்ட பொருட்கள். படம்: தேசிய சுற்றுப்புற வாரியம் -

சாமான்களை இடம்விட்டு இடம் மாற்றும் சேவையில் ஈடுபட்டுள்ள நிறுவனம் ஒன்று ஜாலான் டெருசனில் மேசை, நாற்காலிகளை சட்டவிரோதமாக போட்டுவிட்டுச் சென்றதற்காக அந்நிறுவனத்தின் இயக்குநருக்கு $9,000 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

கடந்த வியாழக்கிழமை இந்தத் தண்டனை விதிக்கப்பட்டதாக தேசிய சுற்றுப்புற வாரியம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

தனது அதிகாரிகள் வழக்கமான கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தபோது 20க்கும் மேற்பட்ட பெரிய சாமான்கள் சட்டவிரோதமாக சிதறிவிடப்பட்டு இருந்ததைக் கண்டதாக வாரியம் கூறியது.

"கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி ஒரு வாடிக்கையாளரின் சாமான்களை அப்புறப்படுத்தும் சேவைகளை வழங்கிய பின்னர் மேசை, நாற்காலிகளை முறையான இடத்தில் சேர்த்திருக்க வேண்டும். ஆனால் அதற்குரிய கட்டணத்தைத் தவிர்க்கும் நோக்கில் அவர் அவற்றை ஜூரோங்கில் உள்ள ஜாலான் டெருசனில் போட்டுவிட்டுச் சென்றார்.

"இவ்வாறு வீதியில் வீசுவதற்குப் பதில் பழைய பொருள் வியாபாரிகளிடமோ மறுசுழற்சி நிறுவனத்திடமோ அவர் ஒப்படைத்திருக்கலாம். எனவே அந்த ஆடவர் இழைத்தது குற்றச்செயல்," என்றது வாரியம்

பொது இடத்தில் வாகனம் ஒன்றிலிருந்து பழைய பொருட்களை வீசியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

குற்றத்தில் ஈடுபட்டவரின் விவரங்களையும் அவரின் நிறுவனத்தின் பெயரையும் வாரியம் வெளியிடவில்லை.

இதுபோன்ற குற்றத்திற்கு $50,000 வரையிலான அபராதம், 12 மாதச் சிறை ஆகியன விதிக்கப்படலாம்.

பொது சுகாதாரத்திற்குக் கேடு விளைவிப்பதாலும் அசுத்தத்தை ஏற்படுத்துவதாலும் கழிவுப் பொருட்களை பொது இடங்களில் வீசுவது கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது என வாரியம் கூறியுள்ளது.