தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எட்டிப்பார்த்த புகைமூட்டம்

2 mins read
ff170a69-639a-4875-bd6d-063a265de721
நேற்று நண்பகல் 12 மணியளவில் பிடோக் ரெசர்வோரில் இருந்து பார்த்தபோது சிங்கப்பூரை லேசான புகைமூட்டம் சூழ்ந்திருந்ததைக் காண முடிந்தது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் நேற்றுக் காலை லேசான புகைமூட்டம் காணப்பட்டது. காற்றில் தூசு துகள்கள் சேர்ந்ததே இதற்குக் காரணம் என தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்தது.

இதன் காரணமாக, கடந்த செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு சிங்கப்பூரின் சில பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியது. பிற்பகலில் நிலைமை மேம்பட்டு, காற்றின் தரம் மிதமான நிலையை எட்டியது.

நேற்று முன்தினம் மாலையில் இருந்து காற்று மிக மெதுவாக வீசியதால் புகைமூட்டம் விலக கூடுதல் நேரமாவதாக தனது ஃபேஸ்புக் வழியாக வாரியம் குறிப்பிட்டு இருந்தது.

"இருப்பினும், பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் அதையடுத்து நிலைமை சற்று மேம்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது," என்று அப்பதிவு கூறியது.

நிலைமையை அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகவும் தேவைப்படும்போது புகைமூட்டம் குறித்த தகவல்கள் வெளியிடப்படும் என்றும் வாரியம் தெரிவித்தது.

பிற்பகல் 2 மணிக்கு 24 மணி நேரக் காற்றுத் தரக் குறியீடு மத்திய வட்டாரத்தில் 86 ஆகவும் தெற்கில் 100ஆகவும் இருந்தது. அந்தக் குறியீடு 51-100க்கு இடைப்பட்டு இருந்தால் காற்றின் தரம் மிதமான நிலையில் இருப்பதாகவும் 101-200க்குள் இருந்தால் ஆரோக்கியமற்ற நிலையில் உள்ளதாகவும் கருதப்படும்.

நேற்றுக் காலை 10 மணிக்கு சிங்கப்பூரின் கிழக்குப் பகுதியில் 24 மணி நேர காற்றுத் தரக் குறியீடு 101 என்ற ஆரோக்கியமற்ற நிலையை எட்டியது.

கடந்த 2016ஆம் ஆண்டிற்குப் பிறகு இவ்வாண்டு செப்டம்பர் 14ஆம் தேதி சிங்கப்பூரின் காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலைக்குச் சென்றது. பத்து நாட்களுக்கு, அதாவது செப்டம்பர் 24ஆம் தேதி வரை அதே நிலை நீடித்தது.

சுமத்ராவின் மத்திய, தெற்குப் பகுதிகளில் காணப்பட்ட காட்டுத் தீயால் உருவான புகையே அதற்குக் காரணம் எனக் கூறப்பட்டது.

செப்டம்பர் மாதப் பிற்பகுதியில் பெய்த மழையால் புகைமூட்டம் விலகி, காற்றுத் தரம் மேம்பட்டது.

முன்னதாக, காற்று மெதுவாக வீசும் என்பதால் காற்றில் தூசு துகள்கள் சேரக்கூடும் என்றும் அதனால் இம்மாதத்தின் முதல் பாதியில் சில நாட்களின் காலைப் பொழுதில் லேசான புகைமூட்டம் ஏற்படலாம் என்றும் கடந்த 1ஆம் தேதி வாரியம் தெரிவித்து இருந்தது நினைவுகூரத்தக்கது.