தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மசெக நகரமன்ற பேட்டைகளில் மின்தூக்கி சேதம் குறைந்தது

2 mins read
8e898337-466e-41b7-a658-e8cb2a4a402a
மின்தூக்கி நுழைவாயிலுக்கு அருகே கண்காணிப்புக் கேமரா ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. தற்போதுள்ள 23,000 வீவக மின்தூக்கிகளில் கிட்டத்தட்ட 97 விழுக்காட்டுக்குக் கண்காணிப்புக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. ( படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்) -

மக்கள் செயல் கட்சி நிர்வாகத்தின் கீழ் வரும் வீவக குடியிருப்புப் பேட்டைகளில் மின்தூக்கி சேதப்படுத்தப்படுவது கிட்டத்தட்ட நான்கு மடங்கு குறைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அந்தப் பேட்டைகளில் உள்ள மின்தூக்கி கண்காணிப்புச் சாதனங்களே காரணம் என்று கூறப்படுகிறது.

மசெக கீழ் வரும் 15 நகரமன்றங்கள் நேற்று வெளியிட்ட கூட்டறிக்கையில் மின்தூக்கிகளைச் சேதப்படுத்தும் சம்பவங்கள் 2017ஆம் ஆண்டில் 342ஆக இருந்ததாகவும் அது கடந்த 12 மாதங்களில் 90ஆகக் குறைந்துள்ளதாகவும் மின்தூக்கி நடவடிக்கைகளை நேரடியாக நகரமன்றங்களுக்குத் தெரிவிக்கும் 'சர்பானா டெக்னாலஜிஸ்' என்ற ஆலோசனை நிறுவனத்தின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

மின்தூக்கிகள் செயலிழப்பதைக் குைறக்கவும் அவற்றின் செயல்பாட்டை மேம்படுத்தவும் கடந்த 2016ஆம் ஆண்டு மக்கள் செயல் கட்சி ஏற்படுத்திய மின்தூக்கி பணிக்குழு பல திட்டங்களை அமல்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

அவை, அனைத்து வீவக புளோக்குகளிலும் மின்தூக்கி கண்காணிப்பு முறைகளை அமல்படுத்துவது, புதிய வீவக திட்டங்களின் கட்டுமான குத்தகையாளர்கள் மின்தூக்கிகளை முறையின்றிப் பயன்படுத்துவது, மின்தூக்கி மேம்பாட்டுத் திட்டம் ஆகியவை.

வீவக நகரமன்றங்களின் கீழ் வரும் 23,000 மின்தூக்கிகளில் 97 விழுக்காட்டு மின்தூக்கிகள் கண்காணிப்புச் சாதனங்களைக் கொண்டிருப்பதாகவும் மீதமுள்ள மின்தூக்கிகளிலும் இந்த முறை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் அமல்படுத்தப்பட்டுவிடும் என்று நகரமன்றங்களின் கூட்டு அறிக்கை விளக்குகிறது.

மின்தூக்கிக் கதவுகளை வேண்டுமென்றே மூடவிடாமல் திறந்து வைத்திருப்பது, மின்தூக்கி பொத்தான்களை சேதப்படுத்துவது, கட்டுமான ஒப்பந்ததாரர்கள், வீடு மாற உதவி புரிவோர் போன்றவர்கள் மின்தூக்கிக் கதவுகளையும் மின்துாக்கி மேற்கூரைகளையும் பாழ்படுத்துவது ஆகியவற்றால் மின்தூக்கிகள் சேதமடைவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற நடத்தையை மின்தூக்கிக் கண்காணிப்புச் சாதனங்கள் தடுக்க உதவுவதுடன் அத்தகைய செயல்களில் ஈடுபடுவோரைக் கைது செய்யவும் உதவி உள்ளன என்று மசெக நகரமன்ற ஒருங்கிணைப்பாளரான டாக்டர் டியோ ஹோ பின் விளக்கினார்.

"மின்தூக்கிகளைச் சரியான முறையில் பயன்படுத்தும் விதமாக நகரமன்றங்கள் அதுகுறித்த துண்டுப்பிரசுரங்களை குடியிருப்பாளர்களின் பார்வைக்காக ஆங்காங்கு வைக்கும்," என்று திரு டியோ தெரிவித்தார்.