பிள்ளை வளர்ப்புக்கு உதவ 10 வட்டார மையங்கள்

பிள்ளை வளர்ப்புக்கு உதவ 10 வட்டார மையங்கள்

2 mins read
366c6d0b-92fb-45bc-b39a-cd9df5503e89
ரிசார்ட்ஸ் வேர்ல்ட் செந்தோசா நீரூற்றுப் பகுதி. கோப்புப் படம் -

அரசாங்க நிதியுடன் கூடிய பிள்ளை வளர்ப்புக்கு ஆதரவு வழங்க தீவு முழுவதும் 10 சமூக சேவை முகவைகள் நியமிக்கப்பட்டு உள்ளன. பிள்ளை வளர்ப்புத் திறன்களை மேலும் அதிகமான பெற்றோர்கள் வலுப்படுத்தத் தேவையான அனைத்தும் ஒரே இடத்தில் வழங்கும் வட்டார மையங்களாக அவை இயங்கும்.

பிள்ளை வளர்ப்புக்கு ஆதரவு வழங்குவோரை நியமிக்கும் திட்டம் ஜூலையில் தொடங்கி இம்மாதம் முடிவுற்றது.

இந்த ஆதரவாளர்கள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட வட்டாரங்களில் பள்ளிகளுடன் இணைந்து செயல்படுவார்கள் என்று ஆசிய குடும்ப மாநாட்டில் நேற்று கலந்துகொண்டு பேசியபோது சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ கூறினார்.

வலுவான குடும்பங்களுக்கான பிள்ளை வளர்ப்பும் அவற்றின் சவால்கள் மற்றும் வாய்ப்புகளும் என்னும் தலைப்பிலானது அந்த ஒரு நாள் மாநாடு.

பிள்ளை வளர்ப்பின் தொடர்பில் 'டிரிபிள் பி', 'சைன்போஸ்ட்ஸ்' என்னும் இரு திட்டங்களை வழங்குவதற்காக கடந்த 2014ஆம் ஆண்டு முதல் பள்ளிக்கூடங்களுடன் அமைச்சு பங்காளித்துவம் செய்துள்ளது.

டிரிபிள் பி திட்டம் மூலம் பிள்ளைகளின் மனரீதியான, சமூக மற்றும் உணர்வுமயமான திறன்களை வளர்ப்பதற்கு உரிய நுணுக்கங்கள் பெற்றோருக்கு வழங்கப்படும்.

அதேபோல, 'சைன்போஸ்ட்ஸ்' திட்டம் தொடக்கப் பள்ளிகளுக்கானது. குழந்தைகளின் கடினமான நடத்தைகளைப் புரிந்துகொண்டு அவற்றை தடுப்பது மற்றும் நிர்வகிப்பது போன்றவற்றில் பெற்றோருக்குத் தேவையான உதவிகளை இத்திட்டம் வழங்கும்.

295 பள்ளிக்கூடங்களில் செயல்படுத்தப்பட்ட இந்த இரு திட்டங்களிலும் சுமார் 20,000 பெற்றோர்கள் கலந்துகொண்டதாக சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு தெரிவித்தது.

தொடக்கநிலை 3, 4 மற்றும் உயர்நிலை 1, 2 ஆகியவற்றின் மாணவர்கள் முக்கியமான மாற்றங்களுக்குரிய பருவத்தில் இருப்பவர்கள் என்பதாலும் புதிய நடத்தையை வெளிப்படுத்தக்கூடியவர்கள் என்பதாலும் இவ்விரு திட்டங்களும் அவர்களின் பெற்றோர்களுக்கு உதவும்.

திட்டத்தின் தன்மையைப் பொறுத்தும் தனிமனிதத் தேவைகளுக்கு ஏற்பவும் கருத்தரங்குகளில் பெற்றோர் கலந்துகொள்ளலாம். நேருக்கு நேர் கலந்துரையாடுவதோடு குழு ஆலோசனைக் கூட்டங்களிலும் அவர்கள் பங்கேற்கலாம். டிரிபிள் பி திட்டத்திற்கான இணைய தெரிவுகளும் கிடைக்கும்.

இரு திட்டங்களின் மதிப்பீடுகளும் பெற்றோர்கள் நன்மை அடைந்ததைக் காட்டுவதாகவும் அவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாகவும் திரு லீ குறிப்பிட்டார்.