மலேசியா செல்வோர் பாஸ்போர்ட்டில் முத்திரையை சரிபார்க்க வேண்டுகோள்

பள்ளி விடுமுறை காலத்தில் மலேசியாவுக்குச் செல்லும் சிங்கப்பூரர்கள் தங்களது பாஸ்போர்ட்டுகளில் முத்திரை முறையாக வைக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்த்துக் கொள்ளுமாறு சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது. பள்ளி விடுமுறை நெருங்குவதால் இந்த பயண நினைவூட்டல் வெளியிடப்பட்டு உள்ளது. 

வெளிநாட்டுப் பயணங்களின்போது விபத்துகள், இயற்கைப் பேரிடர்கள் அல்லது பயங்கரவாதத் தாக்குதல்கள் ஆகியவற்றைச் சமாளிக்க சிங்கப்பூரர்கள் தயாராக இருப்பதோடு தங்களைக் காத்துக்கொள்வதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.

சிங்கப்பூரில் உள்ள தொடக்கப்பள்ளி மற்று உயர்நிலைப் பள்ளிகளுக்கான ஆண்டிறுதி விடுமுறை வரும் சனிக்கிழமை தொடங்குகிறது. அவர்கள் மீண்டும் ஜனவரி 2ஆம் தேதி பள்ளிக்குத் திரும்ப வேண்டி இருக்கும்.

தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்கான விடுமுறை வரும் 23ஆம் தேதியோ அல்லது ஏ-நிலை தேர்வுகள் முடிந்த பின்னரோ தொடங்கும். பயணங்களின்போது சிங்கப்பூரர்கள் தங்களது சொந்த பாதுகாப்பில் கவனம் செலுத்துவதோடு அவர்கள் செல்லும் நாடுகளின் சட்டங்களையும் சுங்கக் கட்டுப்பாடுகளையும் தெரிந்துவைத்துக்கொள்வது நலம் என அறிக்கை தெரிவிக்கிறது.

“சோதனைச் சாவடிகளைக் கடந்து மலேசியாவுக்குச் சென்று வரும் சிங்கப்பூரர்கள் மலேசிய குடிநுழைவு அதிகாரியிடம் பாஸ்போர்ட்டைக் கொடுப்பதையும் அந்த பாஸ்போர்ட்டில் சரிவர முத்திரையிடப்பட்டதா என்பதையும் உறுதி செய்த பின்னர் மலேசிய குடிநுழைவுக் கூடாரத்தை விட்டு வெளியேற நினைவூட்டப்படுகிறார்கள்,” என்று வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது.

அவ்வாறு செய்யத் தவறுவதன் மூலம் மலேசியாவில் குடிநுழைவுக் குற்றங்களுக்கு ஆளாகக்கூடும் என்றும் தடுத்து வைத்தல், அபராதம் விதித்தால், நுழைவுக்கான அனுமதி மறுத்தல் உள்ளிட்ட கடுமையான தண்டனைகளுக்கு ஆளாகக் கூடும் என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.