உயரத்திலிருந்து ஊழியர்கள் விழும் சம்பவங்கள் குறைந்தன

2 mins read
863ad870-ce66-4e9a-a33f-c040ca9b8ea0
ஐடிஇ கிழக்குக் கல்லூரியில் நடைபெற்ற  'உயரத்திலிருந்து வேலை செய்தல்' கருத்தரங்கில் சாரக்கட்டில் ஏறுவதற்கான பாதுகாப்பு உபகரணங்களை அணிந்த  மனிதவள மற்றும் தேசிய வளர்ச்சிக்கான துணையமைச்சர் அமைச்சர் ஸாக்கி முகம்மது. படம்: மனிதவள அமைச்சு -

உயரத்திலிருந்து விழுந்தததால் மரணம் அடையும் ஊழியர்களின் எண்ணிக்கை, 2009ஆம் ஆண்டில் இருந்த 24லிருந்து கடந்தாண்டு எட்டுக்கு குறைந்துள்ளது. 2009ஆம் ஆண்டில் ஊழியர்களின் மரணத்திற்கு உயரத்திலிருந்து விழுவது முக்கிய காரணமாக இருந்தது.

ஊழியர்களுக்குப் பயிற்சி கொடுத்தல், விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டங்களை அறிமுகப்படுத்துதல், விதிமீறல்களுக்கான தண்டனைகளைக் கடுமையாக்குதல் ஆகியவற்றுக்காக அரசாங்கம் 2009ஆம் ஆண்டுக்குப் பிறகு தொழிற்துறை பங்காளிகளுடன் ஒத்துழைத்ததாக மனிதவள மற்றும் தேசிய வளர்ச்சிக்கான துணையமைச்சர் அமைச்சர் ஸாக்கி முகம்மது இன்றுதெரிவித்தார்.

உயரத்திலிருந்து வேலை செய்யும் அபாயத்தைக் குறைப்பதே இந்நடவடிக்கைகளுக்கான முக்கிய காரணம்.

மனிதவள அமைச்சு மேலும் பல்வேறு சோதனைகளைச் செய்திருப்பதாக திரு ஸாக்கி கூறினார். அப்படிப்பட்ட 300 சோதனைகள், 250 நிறுவனங்களில் நடத்தப்பட்ட பிறகு கடந்தாண்டு நான்கு பணிநிறுத்த உத்தரவுகள் விடுக்கப்பட்டன.

அத்துடன், வேலையிடப் பாதுகாப்பு விதிமுறைகள் தொடர்பிலான கவனக்குறைவுகளுக்காக 548 தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன. சாரக்கட்டுகளிலுள்ள தளங்களுக்கு நிற்கும் பலகைகள், போதுமான பாதுகாப்புத் தடுப்புகள் ஆகியவற்றை உறுதி செய்யாமல் இருப்பது போன்ற குற்றங்களுக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்படுகின்றன.

இந்தச் சோதனைகளுக்கு அடுத்து கடந்த செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 91,000 வெள்ளி பெறுமானமுள்ள அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளதாக திரு ஸாக்கி தெரிவித்தார். இந்நிலை முன்னேறியுள்ளபோதும், இவ்வாண்டில் மட்டும் இதுவரை நான்கு மரணங்கள் பதிவாகியுள்ளன.

"நாம் இன்னும் அதிகம் செய்யவேண்டும். மனிதவள அமைச்சின் முயற்சிகள் மட்டும் போதாது," என்றார் திரு ஸாக்கி.

"நமது ஊழியர்களைப் பாதுகாப்பதிலும் உயரத்திரலிருந்து செய்யப்படும் வேலைகளை நிர்வகிப்பதில் கவனம் செலுத்துவதிலும் தொழிற்துறை மேலும் பொறுப்பு ஏற்றுக்கொள்ளவேண்டும்," என்று அவர், ஐடிஇ கிழக்குக் கல்லூரியில் நடைபெற்ற 'உயரத்திலிருந்து வேலை செய்தல்' கருத்தரங்கில் உரையாற்றியபோது கூறினார்.

அடுத்தாண்டு பிப்ரவரிக்குள் இரண்டாவது சுற்று சோதனைகள் நடத்தப்படும் என்று அவர் கூறினார்.

500 தொழில்துறை பங்காளிகள், கட்டுமானம் தொடர்பிலான பயிற்சி வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் ஆகியோரது முன்னிலையில் பேசிய திரு ஸாக்கி, உயரத்திலிருந்து விழுதல் வேலையிட காயங்களுக்குத் தலையாய காரணமாக இருப்பதாகத் தெரிவித்தார்.

"உயரத்திலிருந்து விழுதல், காலங்காலமாக வேலையிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதார அக்கறையாக இருந்து வருகிறது. இந்த வருடாந்திர நிகழ்ச்சி, உயரத்திலிருந்து பணிபுரியும் ஆபத்துகளை நினைவுகூருவதற்காக மட்டுமின்றி, நிலைமையை மேம்படுத்துவதற்கான புத்தாக்க யோசனைகளைப் பகிர்ந்துகொள்வதற்காகவும் ஆராய்வதற்காகவும் முக்கிய தளமாக விளங்குகிறது," என்றார் அவர்.

இவ்வாண்டு உயரத்திலிருந்து விழுந்து உயிரிழந்த நால்வரில் இருவர் கட்டுமானத் துறையில் பணியாற்றினர். எஞ்சிய இருவரில் ஒருவர் உற்பத்தித் துறையையும் சேர்ந்தவர்கள்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity