சுடச் சுடச் செய்திகள்

துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்ட சிறுவன்: உடனடி சிகிச்சை அளித்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம்

தனது சொந்த பெற்றோராலேயே வெந்நீர் ஊற்றி படுகாயமடைந்த ஐந்து வயது சிறுவனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவ நிபுணர் ஒருவர் சிறுவனின் காயங்கள் ரணமாகவும் அழுக்காகவும் இருந்தன என்று நேற்று நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார்.

கேகே மகளிர், சிறார் மருத்துவ மனையின் டாக்டர் கேவின் காங் சுன் வுய், “அந்தச் சிறுவனுக்கு உடலில் 70 விழுக்காட்டு தீப்புண் காயங்கள் இருந்தன.

“இந்த நிலையில் அச்சிறுவனை மிகவும் மோசமான நோயாளி என்றுதான் வகைப்படுத்த முடியும். அறுவை சிகிச்சைக்குப் பிறகும் அவர் பூரண குணமடைவதற்கான சாத்தியக் கூறுகள் மிகவும் குறைவு,” என்று அவர் சாட்சியம ளித்தார்.

சிறுவனின் பெற்றோரான 27 வயது அஸ்லின் அருஜுனா, ரிட்ஸுவான் மெகா அப்துல் ரஹ்மான் இருவருக்கு எதிராக நேற்று நடை பெற்ற நான்காவது நாள் நீதிமன்ற விசாரணையில், அறுவை சிகிச்சைக்கு முன்னும் அறுவை சிகிச் சைக்குப் பின்னும் சிறுவனின் உடல்நிலை படத்தொகுப்பு மூலம் சித்திரிக்கப்பட்டது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அடுத்த நாள் அச்சிறுவன் மாண்டான்.

சிறுவனின் உடலில் இருந்த ஒவ்வொரு காயத்துக்கும் அரசு தரப்பு வழக்கறிஞர் மருத்துவ நிபுணரிடம் விளக்கம் கேட்டார்.

சிறுவனின் காயங்களை விளக்கும் படங்கள் காட்டப்பட்டபோது அந்தப் பெற்றோர் தலைகுனிந்து மௌனமாக இருந்தனர்.

“சிறுவனின் காயங்கள் மிகவும் அழுக்காக இருந்தன. அந்தக் காயங்கள் உடனடியாக சுத்தம் செய்யப்படவில்லை. வெகு நாட்களுக்கு அவை கவனிக்கப்படாமல் இருந்தன.

“காயங்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் சிறுவனைக் காப்பாற்றி இருக்கலாம். அது இல்லாத காரணத்தால் சிறுவனின் உள்ளுறுப்புகள் செயலிழந்திருக்கக்கூடும்,” என்றும் டாக்டர் காங் சாட்சியமளித்தார். 

“2016ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதி சிறுவனுக்குக் காயங்கள் ஏற்பட்டன. ஆனால் அன்று இரவு 8 மணிக்குத்தான் அவன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறான்.

“மண்டையோட்டின் உட்பகுதியில் ரத்தக்கட்டு இருந்தது. ஆனால் மூளையில் காயம் இல்லை. இடது கன்னம், முகவாய், கண் இமை ஆகியற்றில் சிராய்ப்பு காயங்கள், மூக்கெலும்பு முறிவு, உடற்பகுதியில் தீப்புண் காயங்கள் ஆகியவற்றால் சிறுவன் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தான்,” என்றும் டாக்டர் காங் தெரிவித்தார்.