மின்ஸ்கூட்டர் தடை; பாதிக்கப்பட்டவர்களுக்கு பற்றுச்சீட்டு, பயிற்சி உதவிகள்

பொதுமக்கள் பரவலாகப் பயன்படுத்தும் நடைபாதைகளில் மின்ஸ்கூட்டரை ஓட்ட தடை விதிக்கப்பட்டுள்ளதால் தங்களுடைய வாழ்வதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக உணவு விநியோகிப்பாளர்கள் புகார் கூறியுள்ளனர். இது தொடர்பாக அமைச்சர்களையும் சந்தித்து அவர்கள் முறையிட்டனர்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட உணவு விநியோகிப்பாளர்களுக்கு பற்றுச்சீட்டுகளையும் பயிற்சி உதவிகளையும் வழங்க தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் முன்வந்துள்ளது. உணவு விநியோகிப்பாளர்கள், மின்ஸ்கூட்டரிலிருந்து மின் சைக்கிளுக்கு சுமூகமாக மாற இந்த இரு திட்டங்கள் உதவியாக இருக் கும் என்று என்டியுசி நேற்று வெளியிட்ட அறிக்கையில்  தெரிவித் தது.

என்டியுசியின் உறுப்பினர்களாக இருக்கும் உணவு விநியோகிப்பாளர்கள், உணவு போன்ற அன்றாடத் தேவைகளுக்கு குறுகியகால நிதியுதவிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் கோப்பித்தியம் உணவு நிலையங்கள், என்டியுசி ஃபேர்பிரைஸ் பேரங்காடிகளில் பயன்படுத்தக்கூடிய 200 வெள்ளி வரையிலான வெகுமதி அட்டைகளும் வழங்கப்படும்.

உணவு விநியோகிப்புக்கு இனியும் மின்ஸ்கூட்டர்களைப் பயன்படுத்த முடியாது என்பதால் நிதிச் சிரமங்களை எதிர்நோக்கும் உணவு விநியோகிப்பாளர்களுக்கு ‘UFSE’ எனும் குறுகியகால நிவாரண உதவிக்கு கோரிக்கை விடுக்கலாம் என்று என்டியுசி தெரிவித்தது. என்டியுசி உறுப்பினர் அல்லாத உணவு விநியோகிப்பாளர்கள் நவம்பர் 19க்கும் டிசம்பர் 31க்கும் இடையே உறுப்பினராக விண்ணப்பிக்கலாம். மூன்று மாதங்களுக்குப் பிறகு உறுப்பினர் கட்டணம் திருப்பியளிக்கப்படும் என்று என்டியுசி தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு, சேவை நிர்வாகம், முதலுதவி போன்றவற்றில் பயிற்சி பெறவும் உணவு விநியோகிப்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.மின்ஸ்கூட்டர் தடையால் வேலையை மாற்றிக்கொள்ள விரும்புவோருக்கு ‘e2i’ தகுந்த பயிற்சிகளுக்கு பரிந்துரை செய்யும் என்று என்டியுசி தெரிவித்தது.