சிங்கப்பூரின் புத்தாக்கத் திட்டங்களை காட்டும் ஆவணப் படம்

நேஷனல் ஜியோகிராஃபி ஆவணப் படத்தில் உள்ளூரில் உருவான 12 புத்தாக்கத் திட்டங்கள் காட்டப்படவுள்ளன.

அவற்றில் டெங்கிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சிங்கப்பூரின் புத்தாக்கத் திட்டமும் அடங்கும்.

தொடர்பு, தகவல் அமைச்சின் ஒத்துழைப்புடன் தயாரிக்கப்பட்டுள்ள ஒரு மணி நேர ஆவணப் படத்தில் ‘வோல்பாச்சியா’ எனும் நுண்ணுயிரை சுமந்து செல்லும் ஆண் கொசுக்கள் மூலம் எப்படி கொசுக்களின் இனப்பெருக்கம் கட்டுப்படுத்தப்பட்டது என்பது விவரிக்கப்படும்.

டெங்கியைக் கட்டுப்படுத்துவதற்காக தேசிய சுற்றுப் புற முகவை இந்தப் புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியது. 

இது முழு அளவில் வெற்றி பெற்றால் டெங்கிக்கு எதிரான போராட்டத்தில் இம்முறையை பின்பற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

‘புத்தாக்கமான நகரம்’ என்ற அந்த ஆவணப்படம் நேஷனல் ஜியோகிராஃபி ஒளிவழியில் ஞாயிற்றுக் கிழமை இரவு 8.00 மணியளவில் ஒளியேற்றப்படுகிறது.

சிங்கப்பூர் மக்களுக்கும் அவர்களுடைய எதிர்காலத்திற்கும் நவீன தொழில்நுட்பங்கள் மூலம் தீர்வு காணப்பட்டதை ஆவணப் படம் விளக்கும்.

இதற்கிடையே சிங்கப்பூரின் சில புத்தாக்கத் திட்டங்களை விவரிக்கும் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. 

நேஷனல் ஜியோகிராஃபி் ஒளிவழியும் தொடர்பு தகவல் அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்தக் கண்காட்சி மரினா பே சேண்ட்சில் உள்ள டிஜிட்டல் லைட் கேன்வாசில் நடைபெற்றது.