மகன் அளித்த ஊக்கத்தால் வேலாயுதம் தம்பதிக்கு 9 வளர்ப்புப் பிள்ளைகள்

மகன் அளித்த ஊக்கத்தால் வேலாயுதம் தம்பதிக்கு 9 வளர்ப்புப் பிள்ளைகள்

2 mins read
f0b06ac2-3aa0-4763-8088-e0b91a27f66f
ஏட்ரி-ராஜீவ் வேலாயுதம் தம்பதிக்கு, கடந்த 15 ஆண்டுகளில் 9 வளர்ப்புப் பிள்ளைகள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

"உதவியும் தங்குவதற்கு வீடும் தேவைப்படும் பல குழந்தைகள் உள்ளனர்," என்று மகன் ராஜீவ் ஜெரில் தினேஷன் ஆறு வயதாக இருக்கும்போது (15 ஆண்டுகளுக்கு முன்பு) கூறிய வார்த்தைகள், பிள்ளைகளின் வளர்ப்புப் பெற்றோராக இருப்பதற்கான ஊக்கத்தைத் திருவாட்டி லோர்டஸ் தாமஸ் ஏட்ரி, திரு ராஜீவ் வேலாயுதம் தம்பதியருக்கு அளித்தது.

தொடர்ந்து பிள்ளைகளை எடுத்து வளர்க்கத் தொடங்கினர் அந்தப் பெற்றோர்.

தற்போது 14 வயதாகும் ரயான் (உண்மைப் பெயரல்ல) உள்ளிட்ட ஒன்பது குழந்தைகளை அவர்கள் எடுத்து வளர்க்கத் தொடங்கினர்.

ஜூன் மாதம் வரையிலான கணக்கெடுப்புப்படி இந்தத் தம்பதியரைப்போல 510 பிள்ளை வளர்ப்பு குடும்பங்கள் சிங்கப்பூரில் உள்ளன. அவை 542 பிள்ளைகளை வளர்த்து வருகின்றன.

சிங்கப்பூரில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் அவர்களுக்காக குடும்ப தினத்தைக் கொண்டாடி வருகிறது சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு.

வளர்ப்புப் பெற்றோரைப் பாராட்டவும் வளர்ப்புக் குழந்தைகளின் சாதனைகளைக் கொண்டாடவும் சுமார் 270 பேர் நேற்றைய குடும்பதினத்தில் கலந்துகொண்டனர்.

வளர்ப்புப் பிள்ளைகளின் சாதனைகள் நேற்று பாராட்டப்பட்டன. வளர்ப்பு குடும்ப தினத்தில் 20 வளர்ப்புப் பிள்ளைகளுக்குப் பாராட்டு விருது வழங்கப்பட்டது.

ஏட்ரி-ராஜீவ் வேலாயுதம் தம்பதியர் எடுத்து வளர்த்த ரயானும் அவர்களில் ஒருவர். கல்வி, விளையாட்டு, கலை, பண்புநலன் மேம்பாடு ஆகியவற்றில் சாதனை புரிந்தமைக்காக அவருக்கு விருது வழங்கப்பட்டது.

வளர்ப்புப் பெற்றோர் என்னும் பயணம் எப்போதும் எளிதான ஒன்றாக இராது என்றும் சமூக ஆதரவு அதற்குத் தேவைப்படும் என்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் முகம்மது ஃபைசால் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் பிள்ளையைத் தத்தெடுத்து வளர்க்க நிறுவன, சமூகப் பங்காளிகள் பல வழிகளில் கைகொடுத்து வருகிறார்கள் என்று கூறிய அவர், வளர்ப்புக் குழந்தைகள் தங்களை எடுத்து வளர்க்கும் பெற்றோருடனான பந்தத்தை வளர்க்க அந்தப் பங்காளிகள் பேருதவி புரிவதாகக் குறிப்பிட்டார்.

வளர்ப்பு குடும்ப தினத்தில் அத்தகைய 11 பங்காளிகள் அங்கீகரிக்கப்பட்டனர்.

ஜூன் மாதம் வரை சிங்கப்பூரில் இல்லப் பராமரிப்பு கிடைக்காத, எளிதில் ஆபத்தில் சிக்கக்கூடிய 1,150 குழந்தைகள் உள்ளனர்.

புறக்கணித்தல், கைவிடுதல், துன்புறுத்தல் போன்ற காரணங்களால் தங்களது சொந்தக் குடும்பத்தோடு சேர்ந்திருக்க இயலாத குழந்தைகள் அவை.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity