ரேஸ் கோர்ஸ் ரோடு: நூறாண்டு கடந்த பௌத்த ஆலயத்தின் மடாதிபதி மீது பாலியல் புகார்; ஆலயம் மறுப்பு

ரேஸ் கோர்ஸ் சாலையில் இருக்கும் நூறாண்டு கடந்த பௌத்த ஆலயத்தின் மடாதிபதி, ஆலய வளாகத்துக்குள்ளே ஆடவர்களுடன் பாலியல் தொடர்பு வைத்திருந்தார் என்று கூறப்பட்டதை ஆலயம் மறுத்துள்ளது.

ஆலயத்தின் மடாதிபதி டுவான் பூன் ஆடவர்களுடன் பாலியல் செயலில் ஈடுபடுவதாகக் குறிப்பிட்டு சில புகைப்படங்களை கடந்த வியாழக்கிழமை ஃபேஸ்புக்கில் பதிவிட்டவர் மீது ஆலயம் போலிசில் புகார் அளித்துள்ளது.

ஆலயத்தின் பெயரை சீன மொழியில் குறிப்பிட்ட அந்த ஃபேஸ்புக் பயனாளர், தாம் அந்த ஆலயத்தின் பக்தர்களுள் ஒருவர் என்றும் சமயத்தைப் பாதுகாக்கும் பொருட்டு உண்மையை வெளிக்கொணர விரும்புவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

பௌத்த பிக்குகள் பொதுவாக, மணமாகாதவர்களாக இருப்பர்.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர்கள் நேற்று பிற்பகலில் ஆலயத்தைப் பார்வையிட்டபோது மடாதிபதி டுவான் பூன் அங்கில்லை. அவர் பக்கவாதத்திலிருந்து தேறி வருவதாக அங்கிருந்த பராமரிப்பாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

70களில் இருந்த அந்த பராமரிப்பாளர் ஃபேஸ்புக் குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

நீரிழிவு, இதய நோய் போன்ற பல உடல்நலப் பிரச்சினைகளால் மடாதிபதி பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் ஃபேரர் பார்க் மருத்துவமனையில் இவ்வாரத் தொடக்கத்தில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.

அறுவைசிகிச்சையைத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் அவர்.

திரு லீ என்று அறியப்படும் மற்றொரு பக்தர், மடாதிபதியின் நடவடிக்கைகளின் தொடர்பிலான தனது அக்கறையைக் கடந்த மாதம் ஊடகத்திடம் தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தை போலிசிலும் அறக்கொடை ஆணையத்திலும் புகார் செய்திருப்பதாகச் சொன்னார்.

புகார் அளித்திருப்பதை உறுதி செய்த போலிசார், தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகத்துடனான ஆலோசனைக்குப் பிறகு மேற்கொண்டு நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என்றார்.

தனிப்பட்ட இடத்தில் இருவருக்கிடையேயான தொடர்பு என்பதால் அரசுத்தரப்பு இதனைக் கையாளாது என்று போலிஸ் தரப்பில் கூறப்பட்டது.

இது குறித்து விசாரித்து வருவதாக அறக்கொடை ஆணையம் இம்மாதம் 7ஆம் தேதி குறிப்பிட்டது.

இது குறித்த கேள்விக்கு சீன நாளிதழ் லியன்ஹ வான்பாவிடம் பேசிய மடாதிபதி டுவான் பூன், “நான் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். என்னிடம் ஏன் இந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள்?” என்று எதிர்க்கேள்வி எழுப்பியதுடன், தான் மன்னிப்புக் கேட்பதற்கு ஒன்றுமில்லை என்றார்.

கடந்த சனிக்கிழமை ஸு லின் ஆலயத்தில், இது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு சிங்கப்பூர் பௌத்த சம்மேளனத்தின் தலைவரான மரியாதைக்குரிய குவாங் ஃபிங் பதிலளிக்கவில்லை.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity