‘மசே நிதி அடிப்படை ஓய்வுத் தொகை தொடர்ந்து மாற்றப்பட வேண்டும்’

சிங்கப்பூரர்களின் ஆயுட்காலம் இப்போது அதிகரித்திருப்பதால் தங்கள் ஓய்வுக்காலத்துக்காக அவர்கள் அதிக தொகையைச் சேமிக்க வேண்டும் என்றும் அந்த வகையில் அவர்களுக்கு வழங்கப்படும் வழங்கீடுகள் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இருப்பதை உறுதி செய்யும் பொருட்டு, மத்திய சேம நிதிக் கழகம் அதன் உறுப்பினர்களின் அடிப்படை ஓய்வுத்தொகையை தொடர்ந்து மாற்ற வேண்டும் என்றும் மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ நேற்று முன்தினம் தெரிவித்தார்.

55வது வயதில் அடிப்படை ஓய்வுத்தொகையை ஒதுக்கும் மசேநி உறுப்பினர்கள் 65 வயதை எட்டியவுடன் தங்கள் அடிப்படை வாழ்க்கைச் செலவுகளை ஈடுகட்ட மாதாந்திர வழங்கீடுகளைப் பெறுகிறார்கள். “ஆயுட்காலமும் வாழ்க்கைத் தரமும் உயர்ந்துகொண்டு போவதால் அதற்கு ஈடாக அடிப்படை ஓய்வுத்தொகை உயர்த்தப்பட்டால்தான், உறுப்பினர்களுக்கு போதிய அளவில் வழங்கீடுகள் கிடைக்கும்,” என்றும் அமைச்சர் சொன்னார்.