‘அதிபர் சவால்’ பயனாளர்களுடன் அதிபர் ஹலிமா கடற்படை சுற்றுலா

அதிபர் சவால் அறப்பணித் திட்டத்தால் பயனடையும் அமைப்பு

களிலிருந்து ஏறத்தாழ 300 பேருடன் அதிபர் ஹலிமா யாக்கோப் நேற்று காலை நேவி@விவோவுக்குச் சென்றார்.

அதிபருடன் சென்றவர்கள் டௌன் சிண்ட்ரம் சங்கம், பேத் ஏக்ஸ், ஹெச்சிஎஸ்ஏ சமூகச் சேவைகள், என்டியுசி யு கேர், பெர்தாபிஸ் மறுவாழ்வு இல்லம், சிங்கப்பூர் ஆங்கிலிக்கன் சமூகச் சேவைகள் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள். சிங்கப்பூர் கடற்படைக்குச் சொந்தமான அதிவேகக் களம் வாயிலாகக் கடலுக்குச் சென்று ஆர்எஸ்எஸ் சுப்ரீம் போர்க்கப்பலில் அவர்கள் ஏறினர்.

சுற்றுலாவின்போது கடலில் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை கடற்படை அதிகாரிகள் பகிர்ந்துகொண்டனர். விருந்தனர்களுக்கு கப்பலில் உள்ள ஆயுதங்கள், சாதனங்கள், அதிகாரிகளின் தங்குமிடங்கள் காட்டப்பட்டன.

“அதிபர் சவாலின் நீண்டகால ஆதரவாளராக சிங்கப்பூர் கடற்படை திகழ்ந்து வருகிறது. அதிபர் சவால் பயனாளர்களுக்காக இந்தச் சிறப்பு சுற்றுலாவுக்குக் கடற்படை ஏற்பாடு செய்திருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். இன்று நாங்கள் பார்த்த கண்காட்சி, அனுபவித்த கடற்பயணம் ஆகியவை மூலம் நமது நாட்டைப் பாதுகாக்க கடற்படை செயல்படும் முறையை அனைத்துத் தரப்பு சிங்கப்பூரர்களும் நேரில் பார்த்து புரிந்துகொள்ளலாம்,” என்று அதிபர் ஹலிமா தெரிவித்தார்.