நீரிழிவு பிரச்சினையுள்ளவர்கள் தங்களது நிலைமையைக் கட்டுக்குள் வைத்திருக்க கூடுதல் ஆதரவைப் பெறுவதாக சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. கடந்த 2016 முதல் நீரிழிவுக்கு எதிரான போரில் எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் குறித்து அமைச்சு விளக்கியது.
நீரிழிவுடன் தொடர்புடைய பொதுவான பிரச்சினைகளான கண் பார்வைப் பிரச்சினை, சிறுநீரகச் செயலிழப்பு, உடற்பாகங்கள் வெட்டப்படுவது போன்றவற்றைச் சரிசெய்வதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த 2016 முதல் 2018 வரையில் ஆரோக்கிய உணவுத் தேர்வு முத்திரை பொறிக்கப்பட்ட பொருட்களின் அளவு சந்தையில் 7.4% அதிகரித்துள்ளது. 2018 நிலவரப்படி, ஆரோக்கிய உணவுத் திட்டத்தின் ஓர் அங்கமாக, இரண்டில் ஓர் உணவங்காடி, காப்பி கடையின் உணவுப் பட்டியலில் குறைந்தது ஓர் ஆரோக்கிய உணவுத் தேர்வு இடம்பெற்றுள்ளது.
நீரிழிவு நோயாளிகள் தங்களது நிலையைக் கட்டுக்குள் வைத்திருக்க அதிக ஆதரவைப் பெறுகின்றனர்.
எடுத்துக்காட்டாக, கைத்தொலைபேசி செயலியான ஹெல்த்ஹப்பில் நோய் இருப்பதாக அடையாளம் காணப்பட்டவர் தங்களது வாழ்க்கைமுறையை மாற்றிக்கொள்ள உதவும் விவரக்குறிப்புகள் இடம்பெற்றுள்ளது. முழு மையான குறிப்புகள் இந்த ஆண்டு இறுதிக்குள் அதில் இடம்பெறும்.
சிங்கப்பூரர்களிடம் பெருகி வரும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த 2016ல் தொடங்கப்பட்ட நீரிழிவுக்கு எதிரான போரில் மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகள் குறித்து சட்டம், சுகாதாரத் துறைகளுக்கான மூத்த துணையமைச்சர் எட்வின் டோங் பகிர்ந்துகொண்டார்.
உலக நீரிழிவு தினத்தை நினைவுகூர நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் திரு டோங் உரையாற்றினார். நீரிழிவு நோய் உலகளவிலும் சிங்கப்பூரிலும் கவலைக்குரிய சுகாதாரப் பிரச்சினையாக உள்ளது. மூன்றில் ஒரு சிங்கப்பூரருக்கு தங்கள் வாழ்நாளில் நீரிழிவு ஏற்படும் ஆபத்து உள்ளது என்றார் அவர்.
நீரிழிவைக் கட்டுப்படுத்த மூன்று துறை களில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் விளக்கினார். அவை, தங்கள் வாழ்க்கையைத் தாங்களே சரிவர அமைத்துக்கொள்ளும் வகையில் நோயாளிகளின் ஆற்றலை மேம்படுத்துவது, சுகாதாரத் துறை நிபுணர்களையும் சமூகத்தையும் தயார்ப்படுத்துவது, மக்கள் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைப் பின்பற்ற உதவுவது.
நோயாளிகளின் ஆற்றலை மேம்படுத்துவதில் தேசிய பல்கலைக்கழக சுகாதார அமைப்பு (என்யுஎச்எஸ்) முன்னோடித் திட்டத்தை மேற்கொண்டுள்ளது. இத்திட்டம் தனிமனிதர்கள் தாங்களே தங்களது உடல்நிலையைப் பாதுகாத்துக்கொள்ள ஊக்குவிப்பதுடன் தேவையான வாழ்க்கைமுறை மாற்றங்களை மேற்கொள்ள அவர்களுக்கு உதவி செய்கிறது.
மேலும், சுகாதாரத் துறை நிபுணர்களும் தொண்டூழியர்களும் தங்களது பராமரிப்பை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கு கூடு தல் பயிற்சி, வளங்கள் தேவை. சமூக ஆதரவை வலுப்படுத்தும் வகையில் தொண்டூழியர் கள் தங்கள் பணியைச் சிறப்பாக மேற்கொள்ள பல திட்டங்கள் உள்ளன என்றார் அவர்.
நீரிழிவுக்கு எதிரான போரில் மூன்றாவது துறையானது, ஆக்ககரமான வாழ்க்கைமுறை மாற்றங்களை மேற்கொள்ளவும் அவற்றைத் தொடர்ந்து கடைப்பிடிக்கவும் மக்களுக்கு உதவுவது. ஆரோக்கிய உணவுத் தெரிவுகளை அதிகரிப்பது அதில் ஒன்று.
அரசாங்கம், சுகாதாரப் பராமரிப்பு குழுமம், சமூகம் ஆகியவை ஆரோக்கியமான பழக் கவழக்கங்களை மேற்கொள்ள சிங்கப்பூரர்களுக்குத் தொடர்ந்து ஆதரவளித்து ஊக்கப் படுத்தும் அதேநேரத்தில், ஒருவரது உடல் நலம் என்பது அவரது தனிப்பட்ட பொறுப்பாகும். ஆக்ககரமான பழக்கவழக்கங்களைத் தொடர்ந்து கடைப்பிடிக்க தனிமனித முயற்சி தேவை என்றார் திரு எட்வின் டோங்.
ஆக அண்மைய தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 2017ல் 8.6% சிங்கப்பூர் மக்களுக்கு நீரிழிவு உள்ளது.