போர்க்கால வெடிகுண்டு: முதல் கட்ட வெடிப்புச் சத்தம்

இரண்டாம் உலகப் போரின் வெடிகுண்டு செயலிழக்கப்படும் பணிகளில் முதல் கட்ட வெடிப்புச் சத்தம் இன்று (18 நவம்பர்) காலை 11 மணி அளவில் கேட்டது.

கடந்த செவ்வாய்க்கிழமையன்று கிம் செங் சாலை அருகில் உள்ள ஜியாக் கிம் ஸ்திரீட்டில் உள்ள கட்டுமானத் தளத்தில் 50 கிலோ எடை போர்க்கால வெடிகுண்டு இருப்பதாக போலிசாருக்குத் தகவல் கிடைத்தது. 

கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டு அங்கிருந்து அப்புறப்படுத்துவது ஆபத்தான காரியம் என்று முடிவெடித்த வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவு அதை அந்தக் கட்டுமானத் தளத்திலேயே செயலிழக்கச் செய்ய தீர்மானித்தனர்.
  
வெடிகுண்டைச் செயலிழக்கும் பணியில் ஈடுபட்டபோது வெடிப்புச் சத்தம் உட்பட அப்பகுதியில் இருந்தவர்கள் சற்று நடுக்கத்தையும் உணர்ந்தனர். சிங்கப்பூர் ஆற்றுக்கு அருகே இருந்தவர்கள், வெடி பொருட்களின் வாசம் வீசியதாகவும் தெரிவித்தனர்.

ஜியாக் கிம் ஸ்திரீட் அருகே உள்ள  கொண்டோமினியங்களின் குடியிருப்பாளர்கள் தற்காலிமாக இன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை வெளியேறும்படி போலிசார் உத்தரவிட்டிருந்தனர். அதையடுத்து  காலை 7 மணியிலிருந்து குடியிருப்பாளர்கள் வெளியேற தொடங்கினர்.

மிராஜ் டவர், டிரிபேக்கா பை தி வாட்டர்ஃபிரண்ட், ரிவர்கேட் ஆகிய குடியிருப்பு பேட்டைகள் உட்பட ஏறத்தாழ 600 வீடுகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியின் சாலைகளும் தற்காலிமாக மூடப்பட்டுள்ளன.