உணவு விநியோக ஓட்டுநர்களுக்கு மாணவர்கள் ஆதரவுக் குரல்

நடைபாதைகளில் மின்ஸ்கூட்டரை ஓட்டுவதற்கு அண்மையில் தடை விதிக்கப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்ட உணவு விநியோக ஓட்டுநர்களுக்கு ஆதரவாக 100க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் குரல் கொடுத்துள்ளனர். உணவு விநியோக ஓட்டுநர்களின் கருத்துகளைக் கேட்டறியுமாறு அரசாங்கத்தை அம்மாணவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஊடகங்களுக்கு அந்த மாணவர்கள் அனுப்பிய கடிதம் ஒன்றில்,  பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு ஆதரவு வழங்குமாறு உணவு விநியோக நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டனர்.

பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி நடைபாதைகளில் மின்ஸ்கூட்டரை ஓட்டுவதற்கு தடை விதிக்கப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் மற்ற தனிநபர் நடமாட்டச் சாதனங்களுக்கும் இந்தத் தடை கட்டங்கட்டமாக விரிவுபடுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு உணவு விநியோக ஓட்டுநர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. வருமானத்திற்காக தனிநபர் நடமாட்டச் சாதனங்களை நம்பியிருக்கும் அவர்கள், மக்களைச் சந்திக்கும் நிகழ்வுகளில் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தங்களது கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.