'பால் உணர்வை விரும்பியபடி எல்லாம் மாற்றிவிட முடியாது'

'பால் உணர்வை விரும்பியபடி எல்லாம் மாற்றிவிட முடியாது'

2 mins read
5e014a05-ffc5-4b5b-8a6a-2f6b69d72b66
ஜான்சன் ஓங் மிங் (டிசட்டையில்) தன் வழக்கறிஞர்கள் (இடமிருந்து) ஜோஹானஸ் ஹாடி, சுவாங் விஜயா, இயூஜின் துரைசிங்கம் ஆகியோருடன். படம்: சிங் எஸ்.சியா -

ஒருவரின் பால் உணர்வை விரும்பியபடி மாற்றிவிட முடியாது என்றும் அது காரணிகள் மற்றும் சுற்றுச்சூழல் அம்சங்கள் மூலம் ஏற்படக்கூடியது என்றும் நேற்று நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

குற்றவியல் தண்டனை சட்ட (Penal Code) 377ஏ பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் வாதாடுகிறார்கள்.

ஆடவர்களுக்கு இடையில் கண்ணியமற்ற முறையில் இடம்பெறக்கூடிய செயல்களைக் குற்றச்செயல் என்று அந்தச் சட்டம் வகைப்படுத்துகிறது. அந்தப் பிரிவு, ஒருவரின் தனிப்பட்ட சுதந்திரத்துக்கும் வாழ்வுக்கும் உரிமை அளிக்கும் அரசமைப்புச் சட்டத்தின் 9வது ஷரத்தையும் கருத்து சுதந்திரத்துக்கு உத்திரவாதம் வழங்கும் 14வது ஷரத்தையும் மீறுகிறது என்றும் அவர்கள் வாதிடுகிறார்கள்.

சிங்கப்பூரில் பிரிவு 377ஏவுக்கு எதிராக இந்த மாதத்தில் மூன்று வழக்குகள் விசாரணைக்கு வந்திருக்கின்றன. அவற்றில் ஜான்சன் ஓங் மிங் என்ற இசைக்கலை ஞர் சம்பந்தப்பட்ட வழக்கு இரண்டாவதாகும். இந்த வழக்கில் ஜான்சன் ஓங்கை பிரதிநிதிக்கும் மூன்று வழக்கறிஞர்களும் நேற்று உயர் நீதிமன்றத்தில் இவ்வாறு வாதிட்டனர்.

இந்த மூன்று வழக்குகளிலும் பதிலளிக்கும் தரப்பாக தலைமைச் சட்ட அலுவலகம் பட்டியலிடப்பட்டு உள்ளது. ஜான்சன் ஓங்கின் வழக்கறிஞர்கள் தங்கள் தரப்பு வாதத்திற்கு ஆதரவாக ஆறு மருத்துவ பட்டத்தொழிலர்களின் சாட்சியங்களைத் தாக்கல் செய்தார்கள்.

அந்தப் பட்டத்தொழிலர்களில் மூன்று பேரை ஜான்சன் ஓங் தரப்பும் மூன்று பேரை தலைமைச் சட்ட அலுவலக தரப்பும் அழைத்திருந்தது.

பாலுணர்வை விரும்பியபடி எல்லாம் மாற்ற முடியாது என்று இந்த இரண்டு தரப்புகளையும் சேர்ந்த வல்லுநர்களும் பெரும்பாலும் ஒப்புக்கொண்டனர்.

இருந்தாலும் பாலுணர்வைத் தீர்மானிப்பதில் கலாசாரம் போன்ற சமூக சூழல்களும் விருப்பங்களும் பங்கு வகிக்கின்றனவா, இல்லையா என்பதன் தொடர்பில் வல்லுநர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தன.

தலைமைச் சட்ட அலுவலகம் தன்னுடைய வாதத்தை நேற்று தொடங்கியது. இந்த வார பிற்பகுதியில் அது வாதத்தை முடிக்கும்.