தலைமை நீதிபதிக்கு உலக அங்கீகாரம்

தலைமை நீதிபதிக்கு உலக அங்கீகாரம்

2 mins read
128f12bc-af2d-47e9-8c09-d12322ca2ef0
சமரசம், பேச்சுவார்த்தை போன்ற மாற்று வழிகள் மூலம் பிரச்சினை களுக்குத் தீர்வுகாண ஆற்றிவரும் தொண்டுகளுக்காக தலைமை நீதிபதி திரு மேனன் அனைத்துலக அளவில் சிறப்பிக்கப்பட்டு இருக்கிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் வழக்குத் தொடுக்கும் நடைமுறைக்குப் பதிலாக சமரசம், பஞ்சாயத்து, பேச்சுவார்த்தை போன்ற மாற்று வழிகள் மூலம் நீதி கிடைப்பதற்கான வழிகளை மேம்படுத்தியதற்காக தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனனுக்கு உலக அங்கீகாரம் கிடைத்து இருக்கிறது.

ஜெனிவாவைத் தளமாகக் கொண்டு செயல்படும் 'அனைத்துலக பேச்சுவார்த்தை மற்றும் பிரச்சினைத் தீர்வுக் குழு' என்ற அமைப்பு, 'சிறப்பு அங்கீகார விருது 2019ஐ' வழங்கி அவரை சிறப்பித்து இருக்கிறது.

நைஜீரியாவின் தலைநகர் அபுஜாவில் இம்மாதம் 14ஆம் தேதி நடந்த அந்த அனைத்துலக குழுவின் அமைதி விருது விருந்து நிகழ்ச்சியில் திரு மேனனுக்கு அந்த விருது வழங்கப்பட்டது.

இந்த விவரங்களை சிங்கப்பூர் உச்ச நீதிமன்றம் நேற்று அறிக்கையில் தெரிவித்தது.

"பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண நீதிமன்றத்தை நாடாமல் மாற்று வழிகளை உருவாக்குவதற்குத் திரு மேனன் கடப்பாடு கொண்டிருக்கிறார்.

"சுயநலம் பாராமல் சேவையாற்றுகிறார். மற்றவர்களுக்கு முன் உதாரணமாக விளங்கக்கூடிய தலைமைத்துவத்தை அவர் வெளிப்படுத்தி இருக்கிறார்.

"இதற்காக அவர் உலகளவில் அங்கீகரிக்கப்படுகிறார்," என்று அறிக்கை தெரிவித்து உள்ளது.

சிங்கப்பூரில் குடிமை நீதி முறையை மேம்படுத்தி அதை நவீனப்படுத்துவதற்குத் திரு மேனன் ஆற்றிவரும் தொண்டு களை விருதுக் குழு சுட்டிக்காட்டி இருப்பதாகவும் அறிக்கை குறிப்பிட்டு உள்ளது.

வர்த்தகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் உலகளவில் முன்னணி இடமாக சிங்கப்பூரை பலப்படுத்துவதற்குத் திரு மேனன் ஆற்றி வரும் தொண்டுகளையும் குழு குறிப்பிட்டு உள்ளது.

இதனிடையே, இந்த அங்கீகாரம் கிடைத்திருப்பது பற்றி கருத்து கூறிய திரு மேனன், இது தமக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது என்றார்.